தெற்கு ரயில்வேயில் 9 மாதங்களில் ரூ.9,846 கோடி வருவாய்
தெற்கு ரயில்வேயில் 9 மாதங்களில் ரூ.9,846 கோடி வருவாய்
ADDED : ஜன 27, 2026 07:07 AM

சென்னை: “தெற்கு ரயில்வேயில், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, 9,846 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது,” என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் ரயில்வே மைதானத்தில், 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆர்.என்.சிங்., தேசியக்கொடி ஏற்றினார்.
ரயில்வே பள்ளி, மாற்றுத்திறனாளி பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன், ரயில்வே பாதுகாப்பு படைப் பிரிவு மற்றும் மோப்பநாய் பிரிவின் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன.
விழாவில், ஆர்.என்.சிங் பேசியதாவது:
தெற்கு ரயில்வே மண்டலம், சிறந்த செயல்பாட்டுக்கான திறன் பிரிவில், ரயில்வே துறையின் இரண்டு விருதுகளை வாங்கியுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில், ஏப்., முதல் டிச., வரை, தெற்கு ரயில்வே 9,846 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 7.5 சதவீதம் அதிகம்.
கடந்த நிதி ஆண்டில் டிசம்பர் வரை, 57.90 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இது, முந்தைய ஆண்டை விட 6.2 சதவீதம் அதிகம். சரியான நேரத்தில், 92 சதவீத ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் தேவையை கருத்தில் வைத்து, வழக்கமான ரயில் சேவையுடன், கூடுதலாக 3,570 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்புப்படை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள்ஜோதி, ரயில்வே வாரிய முன்னாள் உறுப்பினர் நவீன்குலாத்தி, கூடுதல் பொது மேலாளர் விபின்குமார், சென்னை கோட்ட மேலாளர் ஷைலேந்திரசிங் உட்பட பலர் பங்கேற்றனர்.

