தெற்கு ரயில்வே அலுவலக பணியில் ஹிந்தி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு
தெற்கு ரயில்வே அலுவலக பணியில் ஹிந்தி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு
ADDED : ஆக 26, 2025 06:51 AM
சென்னை : 'தெற்கு ரயில்வேயில் அலுவலக பணிகளில், 'ஹிந்தி' மொழி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்' என, அனைத்து பிரிவுகளின் தலைமை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் கீழ், 90,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள, டிக்கெட் கவுன்டர்களில், சிலர் ஹிந்தியில் மட்டுமே பேசுவதால், தமிழக பயணியர் டிக்கெட் எடுப்பதில் சிரமத்தை சந்திக்கின்றனர். சில இடங்களில் வாக்கு வாதமும் ஏற்படுகிறது.
இதற்கிடையே, தெற்கு ரயில்வேயின் அலுவலக பணிகளில், ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அனைத்து பிரிவுகளின் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
ரயில்வே அலுவலக பணிகளில், 'ஹிந்தி' மொழி பயன்பாட்டை அதிகரிக்க, செப்., 19ம் தேதி வரை சிறப்பு முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும். கடித பரிமாற்றங்களில் ஹிந்தியை பயன்படுத்த வேண்டும்.
தெற்கு ரயில்வே அறிவிப்புகள், ஒப்புதல், அனுமதி, முன்மொழிவு உள்ளிட்ட வார்த்தைகளையும் ஹிந்தியில் குறிப்பிட வேண்டும்.
பெரும்பாலானோர் இந்த முன்னெடுப்பில் பங்கேற்பதை உறுதி செய்வது அவசியம்.
ஹிந்தி மொழி முன்னெடுப்பின் நிறைவில், மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விபரத்தை, துணை பொது மேலாளருக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

