தென் மண்டல தி.மு.க., இளைஞரணி மாநாடு மதுரைக்கு பதிலாக விருதுநகருக்கு மாற்றம்
தென் மண்டல தி.மு.க., இளைஞரணி மாநாடு மதுரைக்கு பதிலாக விருதுநகருக்கு மாற்றம்
ADDED : டிச 21, 2025 01:15 AM
மதுரையில், வரும் ஜனவரி 3ம் தேதி நடக்க இருந்த தென் மண்டல தி.மு.க., இளைஞரணி மாநாடு, தேதி மாற்றப்பட்டு, ஜன., 24ம் தேதி விருதுநகரில் நடக்க உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன், தி.மு.க., இளைஞர் அணி சார்பில், ஐந்து மண்டலங்களில் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது.
பின், மூன்று மண்டலமாக குறைக்கப்பட்டு, தற்போது நான்கு மண்டலங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முதலாவதாக, வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு, திருவண்ணாமலையில் கடந்த 14ம் தேதி நடந்தது.
அதில், 1 லட்சத்து 30,000 நிர்வாகிகள் பங்கேற்றதாக, தி.மு.க., இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி அறிவித்தார்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஈரோடில் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
அதற்கு போட்டியாக, தென் மண்டல தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் மாநாட்டை சிறப்பாக நடத்த, உதயநிதி தரப்பில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
வரும் ஜன., 3ம் தேதி, மதுரை மண்டல மாநாடு; ஜனவரி இறுதியில் கோவை மண்டல மாநாடு என, நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது அத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
அதாவது, மதுரையில் ஜன., 3க்கு பதிலாக, விருதுநகரில் ஜன., 24ம் தேதி மாநாடு நடக்கிறது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டிற்கு, தென் மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு ஏற்பாடு செய்ய உள்ளார்.
அதையடுத்து, பிப்., மாதத்தில் டெல்டா மாவட்டங்களை இணைத்து, தி.மு.க., முதன்மை செயலரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாநாடு நடத்தப்படுகிறது.
அதே மாதத்தில், மேற்கு மண்டல மாநாடு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் கோவை அல்லது ஈரோடில் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின
- நமது நிருபர் -.

