ADDED : மே 14, 2025 12:36 AM
சென்னை:'தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே, தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் நேற்று துவங்கியது' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையார் பகுதியில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சின்கோனாவில், 6; மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி, நீலகிரி மாவட்டம் கேத்தி, தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி ஆகிய இடங்களில், தலா, 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை
இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில், தென்மேற்கு பருவமழை நேற்று துவங்கியது. அந்தமான் கடல் பகுதியில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், வேலுார், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று முதல் வரும் 17 வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 39 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில், 106 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. ஈரோடு, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, திருச்சி, வேலுார் மாவட்டங்களில், 104 - 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40 டிகிரி செல்ஷியஸ், சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், காரைக்கால், சேலம், தஞ்சை, திருத்தணி ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.