UPDATED : மே 15, 2024 10:20 AM
ADDED : மே 15, 2024 06:03 AM

சென்னை: இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட முன்னதாக, வரும், மே 19ம் தேதியே துவங்க வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு, தென்மேற்கு பருவமழை தான் பிரதானம். இந்தப் பருவ காலத்தில், கேரளா, கர்நாடகா மாநிலங்களில், அதிக மழை பெய்தால் மட்டுமே, தமிழகத்தின் பல்வேறு அணைகளும் நிரம்பும்.
அந்த வகையில், கடந்த ஆண்டு கேரளா, கர்நாடக மாநிலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பொழிவு இல்லாததால், தற்போது பெரும்பாலான தமிழக அணைகள் வறண்டுள்ளன.
பொதுவாக மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தான் தென்மேற்கு பருவமழை துவங்கும். இந்தாண்டு வரும், 19ம் தேதியே, துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வானிலை துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை, வழக்கமான காலத்துக்கு முன், மே 19ல் தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் நிகோபார் தீவுகளில் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன' என்று கூறப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில்...
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மே, 18 வரை கனமழையும், 19, 20ம் தேதிகளில் பரவலாக மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு, அதிகபட்சமாக, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

