வரும் 25ல் தமிழகம், கேரளாவில் துவங்குது தென்மேற்கு பருவமழை
வரும் 25ல் தமிழகம், கேரளாவில் துவங்குது தென்மேற்கு பருவமழை
ADDED : மே 21, 2025 12:36 AM
சென்னை:'தமிழகம், கேரள பகுதிகளில், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே, வரும் 25ல் துவங்க உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், அதிகபட்சமாக 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்; சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை; தர்மபுரி; கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில், தலா, 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம், தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும். அதன்பின் தமிழகத்தில் மழை பெய்வது வழக்கம். மத்திய கிழக்கு அரபிக்கடலில், கர்நாடக கரைக்கு அப்பால், இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இதன் தாக்கத்தால், நாளை அதே பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது, வடக்கு திசையில் நகர்ந்து வலுவடையலாம். இந்த பின்னணியில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட, முன்கூட்டியே துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. இதன்படி, தமிழகம், கேரளா பகுதிகளில், 24 அல்லது 25க்குள் தென்மேற்கு பருவமழை துவங்கக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக்கடலில், தெற்கு ஆந்திரா, தமிழகத்தின் வடமாவட்டங்கள் இடையே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, வரும் 26ம் தேதி வரை தொடரலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று, மணிக்கு 45 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.