ADDED : மே 06, 2025 09:55 PM
சென்னை:இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை, வரும் 13ல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளை ஒட்டிய பகுதிகளில் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு தென்மேற்கு பருவமழையே பிரதான ஆதாரம். தமிழகத்தின் ஆண்டு மழை தேவையில், 32 சதவீதத்தை தென்மேற்கு பருவமழை பூர்த்தி செய்கிறது.
பொதுவாக, மே மாத இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில், தென்மேற்கு பருவமழை துவங்கும். கடந்த ஆண்டு மே, 19ம் தேதி, அந்தமான் நிகோபார் தீவுகளை ஒட்டிய கடல் பகுதியில், தென்மேற்கு பருவமழை துவங்கியது. நடப்பு ஆண்டில் முன்கூட்டியே துவங்கக்கூடும் என்று தெரிகிறது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகள், நிகோபார் தீவுகள் ஆகிய இடங்களில், வரும், 13ல் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. எனவே, 13ல் பருவமழை துவங்கக்கூடும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 12 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
இன்று முதல் 9 வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், அதிகபட்ச வெப்ப நிலை, 39 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.