துாத்துக்குடியில் நடுரோட்டில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய எஸ்.பி.,
துாத்துக்குடியில் நடுரோட்டில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய எஸ்.பி.,
ADDED : ஜன 02, 2025 07:45 AM

துாத்துக்குடி : ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, துாத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதிகாலை 1 மணிக்கு மேல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், பைக் ரேஸ் போன்ற சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வி.இ., சாலையில் மக்களோடு இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். ஏ.எஸ்.பி., மதன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் மயில்வாகனப் பெருமாள் தலைமையிலான போலீசார் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஐந்து கேக்குகள் ஒரே மேஜையில் வைக்கப்பட்டு சரியாக 12 மணிக்கு எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் வெட்டினார்.
அங்கிருந்த போலீசார் மற்றும் மக்களுக்கு அவர் கேக் வழங்கினார். அவருடன், அங்கிருந்தவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர், அங்கிருந்த வாகனங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. வி.இ., சாலை ஒருவழிப்பாதை என்பதால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.
காவல் துறை, மக்களோடு இணைந்திருக்கிறது என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.

