மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம்
ADDED : ஏப் 30, 2025 07:28 AM

சென்னை: சென்னையில், பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, 1,800 சிறப்பு பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், 25 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக உள்ளனர். மாதம் 25,000 ரூபாய் ஊதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அந்த பயிற்சி, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதற்கான, மத்திய மறுவாழ்வு கவுன்சிலின் அங்கீகாரம் பெற தகுதியற்றதாக உள்ளது. இதனால், அவர்களின் பணி, அங்கீகாரம் பெறாத நிலையிலேயே உள்ளது. அதனால், 800க்கும் மேற்பட்ட பயிற்றுநர்களுக்கு, 'மெமோ' வழங்கப்பட்டுள்ளது. இதைக்கண்டித்தும், உரிய பயிற்சியை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்ககமே நடத்த வலியுறுத்தியும், நேற்று நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தை, 300க்கும் மேற்பட்ட, சிறப்பு பயிற்றுநர்கள் முற்றுகையிட்டு, கோஷம் எழுப்பினர்.
அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பெரியமேடு, கண்ணப்பர் திடல் சமூகக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை விடுவிக்கப்பட்டனர்.

