ADDED : டிச 24, 2024 07:17 AM
சென்னை : மணிப்பூரில் தங்கியுள்ள மியான்மரை சேர்ந்த, 40 பேர் கும்பல், சென்னைக்கு மெத் ஆம்பெட்டமைன் வினியோகம் செய்வது தெரியவந்துள்ளது.
சில தினங்களுக்கு முன், சென்னை மாதவரம் பகுதியில், 1.50 கிலோ மெத் ஆம்பெட்டமைன் கடத்தி வந்த வெங்கடேசன், 41, கார்த்திக், 36, என்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், இவர்களுக்கு பின்னணியில், மணிப்பூரில் தங்கியிருந்து, சென்னைக்கு மெத் ஆம்பெட்டமைன் கடத்தும் மியான்மரை சேர்ந்த கும்பல் இருப்பது தெரியவந்தது.
மியான்மர் கும்பலுடன் வெங்கடேசன் நேரடி தொடர்பில் இருந்துள்ளார்.
இவர், போதைப் பொருள் கடத்தல் வழக்கில், பஞ்சாப் போலீசாரிடம் சிக்கி, ஏழு ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்; 2021ல் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
பின், மியான்மர் கும்பலுடன் சேர்ந்து, சென்னைக்கு மெத் ஆம்பெட்டமைன் கடத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு உடந்தையாக கார்த்திக் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மணிப்பூரில், மியான்மரை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல், 40 பேர் தங்கி இருப்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்ய, தனிப்படை போலீசார் அங்கு சென்றுள்ளனர்.