பிரதமர் மோடி பிறந்த நாளில் துவங்கும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்; நாளை முதல் அக். 2 வரை நடக்கிறது
பிரதமர் மோடி பிறந்த நாளில் துவங்கும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்; நாளை முதல் அக். 2 வரை நடக்கிறது
ADDED : செப் 16, 2025 12:39 AM

விருதுநகர்; பிரதமர் மோடியின் பிறந்த நாள் முன்னிட்டு 'ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான்' என்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை மத்திய அரசு நாடு முழுவதும் நாளை (செப். 17) முதல் அக். 2 வரை நடத்துகிறது. இதில் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடத்தப்படுகிறது.
பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப். 17ல் துவங்கி அக். 2 வரை 'ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான்' திட்டத்தில் அனைத்து துணை, ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.
ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு, மார்பக புற்றுநோய் உள்பட பல வகையான நோய் பரிசோதனைகள், கர்ப்பிணிகளுக்கான பரிசோதனைகள், காசநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது.
இம்முகாமில் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடத்தப்படவுள்ளது.
மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மூலமாக ஆலோசனை, சிகிச்சை வழங்கப்படும்.
மேலும் தினசரி துணை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக பதிவு செய்யப்பட்டவர்களுக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பும் அளிக்கப்பட உள்ளது.

