ADDED : ஜன 19, 2024 02:32 AM

கடலுார்:''அரசின் நிதிநிலை சரியானவுடன் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்'' என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலுாரில் அளித்த பேட்டி:
தொழிலாளர் நலத்துறை சார்பில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து முத்தரப்பு பேச்சு இன்று நடக்கிறது.
பொங்கல் விடுமுறை சிறப்பு பஸ்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். விடுமுறை முடித்து சென்னைக்கு திரும்பியவர்களின் வசதிக்காக தினம் 1000 பஸ் என மேலும் இரண்டு நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் பொங்கலுக்கு முன்பே அரசு விரைவு பேருந்து இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. பெங்களூரு இ.சி.ஆர். மார்க்கம் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
மற்ற அனைத்து வழித்தட பஸ்களும் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் வழியாக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு இயக்கப்படுகின்றன.
படிப்படியாக அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இது குறித்து அடுத்த ஒரு வாரத்தில் சிறப்பு கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய பஸ் நிலைய வசதிகள் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கை தான் முன்னிலை படுத்தப்பட்டன. இந்த கோரிக்கை அரசின் பல்வேறு துறைகளை சார்ந்தது.
நான்கு கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகள் நிதித்துறை சார்ந்தவை என்பதால் இதை உடன் நிறைவேற்ற முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும்.
ஆனால் அ.தி.மு.க. அரசியல் காரணங்களுக்காக போராட்டத்தை முன் எடுத்துள்ளனர். அரசு நிதி நிலை சரியானவுடன் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
பணிக்காலத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு அடிப்படையில் தமிழகம் முழுதும் 800க்கும் மேற்பட்டவர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிரைவர் கண்டக்டர் நியமனத்திற்கு எழுத்து தேர்வு முடிந்து தற்போது நேர்முகத் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு வரும் பிப்ரவரி முதல் வாரம் வரை நடக்கும் அதன் பின் தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகளில் இரண்டு நடைமுறையில் உள்ளன.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

