ADDED : ஜன 02, 2024 11:33 PM

திருவாரூர்:புத்தாண்டை முன்னிட்டு, -ஞானபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி அருள் பாலித்தார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட சேத்திரம் ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் லட்சுமி நரசிம்மர், கோதண்ட ராமர் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளியுள்ளனர். 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி இடுப்பில் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாதிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு. ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி மங்கலம் உண்டாகும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன் தினம் அதிகாலை நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு ஜெகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
வாழைப் பழங்கள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசியும், 1 ரூபாய் நாணயம் மற்றும் பிரசாதம் வழங்கினார். மாலையில், வெள்ளி ரதத்தில் ஆஞ்சநேய சுவாமி எழுந்தருள மங்கள வாத்தியங்கள் இசைக்க வீதியுலா நடைபெற்றது.
நேற்று, ஜெகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் ஜெயந்தி விழாவும், 11ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளது.
இரு பெரும் ஜெயந்தி விழாக்களை முன்னிட்டு இன்று முதல் 7ம் தேதி வரை சிறப்பு ஹோமம் மற்றும் ஜெபங்கள் நடத்தப்படுகின்றன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மாதிகாரி ரமணி அண்ணா ஸ்ரீகாரியம் சந்திரமவுலி ஆகியோர் செய்து வருகின்றனர்.