ஆந்திராவில் நடிகை கஸ்துாரியை தேடும் தனிப்படை போலீசார்
ஆந்திராவில் நடிகை கஸ்துாரியை தேடும் தனிப்படை போலீசார்
ADDED : நவ 12, 2024 04:06 AM

சென்னை: தெலுங்கர் குறித்து சர்ச்சையாக பேசிய நடிகை கஸ்துாரி, ஆந்திராவில் இருப்பதாக தகவல் கிடைத்ததால், தனிப்படை போலீசார், அவரை தேடி அங்கு சென்றுள்ளனர்.
சென்னையில் கடந்த, 3ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், நடிகை கஸ்துாரி பேசுகையில், தெலுங்கர் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை கூறினார். அதற்கு கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, 'வேண்டுமென்றே சிலர் என் பேச்சிற்கு உள்நோக்கம் கற்பித்து, அதை சமூக வலைதளத்தில் திரித்து வெளியிடுகின்றனர்' என, விளக்கம் அளித்தார்.
அதன்பின், 'தெலுங்கு மொழி பேசுவோர் குறித்து பேசியதை திரும்பப் பெறுவதாகக் கூறி, பேசியதற்கு மன்னிப்பும் கோரினார்.
இதற்கிடையே, தெலுங்கு அமைப்பினர், சென்னை, மதுரை என, பல இடங்களில், கஸ்துாரி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.
சென்னை எழும்பூர் மற்றும் மதுரை மாவட்டம் திருநகரில், கஸ்துாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை எழும்பூர் போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி, கஸ்துாரிக்கு சம்மன் வழங்க, போயஸ் கார்டனில் உள்ள, அவரது வீட்டிற்கு சென்றனர். வீடு பூட்டியிருந்தது.
அதைத் தொடர்ந்த, தனிப்படை அமைத்து, கஸ்துாரியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கஸ்துாரி மொபைல் போன், கடைசியாக ஆந்திர மாநிலத்தில் 'சுவிட் ஆப்' செய்யப்பட்டு இருப்பதால், தனிப்படை போலீசார் அவரை தேடி அங்கு சென்றுள்ளனர். இதற்கிடையே, முன் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கஸ்துாரி மனு தாக்கல் செய்துள்ளார்.