மாநிலத்திற்குள் முடங்கும் சிறப்பு பள்ளி மாணவர்கள்
மாநிலத்திற்குள் முடங்கும் சிறப்பு பள்ளி மாணவர்கள்
ADDED : நவ 21, 2025 11:28 PM
சென்னை: மாநில போட்டிகளில் வெற்றி பெறும் சிறப்பு பள்ளி மாணவர்கள், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் 60 சிறப்பு பள்ளிகளில், 6,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இவற்றில் உள்ள பெரும்பான்மை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, போதுமான ஆசிரியர்கள் இல்லை. இதனால், போட்டிகளில் பங்கு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பார்வையற்றோர் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
ஆண்டுதோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் முதல்வர் கோப்பை மற்றும் மாநில மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டியில் மட்டுமே, எங்கள் மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர்.
இவர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டியில் பங்கேற்க, அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்து வருகிறது. மேலும், விளையாட்டு துறை வெளியிடும் போட்டிகள் குறித்த தகவல்களும் எங்களுக்கு கிடைப்பதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

