கடலாமைகள் இறப்பை தடுக்க சிறப்பு குழு, கூட்டு ரோந்து குழு
கடலாமைகள் இறப்பை தடுக்க சிறப்பு குழு, கூட்டு ரோந்து குழு
ADDED : ஜன 28, 2025 05:55 AM
சென்னை: கடலாமைகள் முட்டையிடுதல் பணிகளை கண்காணிக்கவும், இறந்து கரை ஒதுங்குவது குறித்து ஆய்வு செய்யவும், சிறப்பு குழு மற்றும் கூட்டு ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் வரை, கடலோர பகுதிகளில் கடலாமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலம். இந்த ஆண்டு அதிக அளவில் கடலாமைகள் இறந்து கரை ஒதுங்குவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆலோசனை கூட்டம்
தமிழக தலைமை செயலர் தலைமையில், வனம் மற்றும் சுற்றுச்சூழல், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கடந்த 21ல் நடந்தது. கடலாமைகள் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்குவது குறித்து, அதில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
கடலோர பகுதிகளில், 9.26 கி.மீ., தொலைவு வரை, இழுவை மடி வலைகளுடன் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இக்காலத்தில் ஆமைகளை வெளியேற்றும் கருவியை பொருத்தாமல், இழுவை வலைகளை பயன்படுத்தக் கூடாது.
கடலுக்குள் செல்லும் போது விதிகளை மீறி, ஜி.பி.எஸ்., கருவிகளை அணைத்து வைக்கும் கப்பல், படகுகளுக்கு டீசல் மானியம், பிற படிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட மாட்டாது.
கடலாமைகள் முட்டையிடும் காலத்தில், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, தமிழக தலைமை வன உயிரின காப்பாளர் தலைமையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கடலோர காவல் படை, மீன்வளம், வனம், கடல் மீன்பிடித்தல் ஒழுங்குபடுத்துதல் சட்ட அமலாக்கப் பிரிவு, தமிழக கடலோர காவல் படை அதிகாரிகள், இதில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு வாரம் ஒருமுறை கூடி, கடலாமைகள் நடமாட்டம், இனப்பெருக்கம் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ளும்.
மேலும், கடலோர காவல் படை, மீன்வளம், வனம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் அடங்கிய கூட்டு ரோந்துக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கடலாமைகள் இறப்பு குறித்து தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கடலாமைகள் இறந்து கரை ஒதுங்கும் போது, பிரேத பரிசோதனை எண்ணிக்கையை, 50 சதவீதமாக அதிகரித்து, அறிவியல் முடிவுகளை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முட்டைகள் சேகரிப்பு
நடப்பு ஆண்டில், 52 இடங்களில் மையங்கள் அமைத்து, 14 கடலோர மாவட்டங்களில் கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
கடலாமைகள் முட்டையிடும் பகுதிகளில், இரவு, 11:00 முதல் காலை, 5:00 மணி வரை, வாகனங்களின் முகப்பு விளக்குகளை கண்டிப்பாக எரிய விடக்கூடாது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின், ஜன., 23, 24 தேதிகளில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு கூட்டு ரோந்து மேற்கொண்டது.
இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்வதன் வாயிலாக, இறந்து கரை ஒதுங்குவது கட்டுப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.