மஹா சிவராத்திரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா பயணிகள் எதிர்பார்ப்பு
மஹா சிவராத்திரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 16, 2025 03:49 AM
மதுரை: 'மஹா சிவராத்திரியை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குமா' என தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பிப். 26ல் நாடு முழுவதும் மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சிவராத்திரியை முன்னிட்டு சென்னை, கோவை, மதுரையில் இருந்து தென்மாவட்டங்களில் உள்ள குலதெய்வ கோயில்களுக்கு பக்தர்கள் அதிகளவில் செல்வர்.
தாமிரபரணி நதிக்கரையில் ஸ்ரீவைகுண்டம் நவ கைலாயம்மன் கோயிலில் சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படும்.
சைவ - வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக குமரி மாவட்டத்தில் 'சிவாலய ஓட்டம்' நடைபெறும். அங்குள்ள முஞ்சிறை திருமலை, திக்குறிச்சி உள்ளிட்ட 12 தலங்களுக்கும் பக்தர்கள் ஓட்டமும் நடையுமாக சென்று சுவாமி தரிசனம் செய்வர். கோவில்பட்டி அருகே கீழஈரால் காமாட்சி அம்மன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 'மயானக் கொள்ளை' திருவிழா நடைபெறும்.
இந்நிலையில் மஹா சிவராத்திரி தினத்தன்று சென்னையில் இருந்து திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் தற்போதே 200ஐ நெருங்கிவிட்டது.
எனவே பக்தர்கள் வசதிக்கேற்ப கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ரயில் பயண ஆர்வலர்கள் அருண் பாண்டியன்,பாலாஜிகூறுகையில், ''மஹா கும்பமேளாவிற்கு தென் மாவட்டங்களில்இருந்து காசிக்கும், தைப்பூசத்திற்குமதுரை - பழநி, கோவை - திண்டுக்கல் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளிடம் வரவேற்பு பெற்றன. அதுபோல் மஹா சிவராத்திரி தினத்தன்று பக்தர்களின் வசதிக்காக பிப். 25, 26, 27ல் சென்னை, பெங்களூரு, கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். மதுரையில் இருந்து திருச்செந்துார், திருநெல்வேலி, கோவைக்கு முன்பதிவில்லா ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும்'' என்றனர்.

