PUBLISHED ON : ஜன 27, 2026 01:25 AM

தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
மஹாராஷ்டிராவில் சிவசேனாவை சீரழித்தது போலவே, பா.ம.க.,விலும் மகனை பிரித்து பரமபதம் ஆடுகிறது பா.ஜ., கட்சி. வேறு வழியின்றி வழக்குக்கு அஞ்சி வழி தவறுகிறார் அன்புமணி. இப்படி கூடா நட்புகளின் கூடாரமாக, துரோகங்களின் தோரணமாக, ஆளில்லா கட்சிகளின் அணிவகுப்பாக, முதுக்கு குறி வைப்போரது முகாமாக இருக்கிறது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி. பா.ம.க.,வைப் பிரித்து, பந்து ஆடுவது, தான் சார்ந்திருக்கும் கட்சி என்பது முற்றிலும் தெரிந்தும், வார்த்தை ஜாலத்தால், உண்மையை மறைக்க, படாதபாடு படுகிறார் அழகுராஜ் என்பது, நன்றாகவே புரிகிறது!
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
சென்னை கோவளத்தில், தனியார் ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனத்தினரை மிரட்டி, லஞ்சம் கேட்டதாகவும், குண்டர்களை வைத்து, தங்களை அலுவலகத்திற்குள் சிறை வைத்ததாகவும், வி.சி., கட்சியின் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ., பாலாஜி மீது, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். எம்.எல்.ஏ.,க்களே சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் அளவிற்கு, தி.மு.க., ஆட்சியில் தமிழகம் தடுமாறிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு.
வி.சி., கட்சியில் இருக்கணும் என்றாலே, இந்த மாதிரி மிரட்டல், உருட்டல்வேலைகளில் கைதேர்ந்தவராக இருக்கணுமோ?
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் அறிக்கை:
என் நண்பரான மலையாள நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை; ஆனால், நான் அவரையும், அவர் என்னையும் துார இருந்து ரசித்தும், ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்தும், நட்பை நீண்ட நாட்களாக பேணி வருகிறோம். என் ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே, ஒரு மம்மூட்டி ரசிகனான என் எதிர்பார்ப்பு.
ஆரோக்கியமான நட்புக்கு, இது ஒரு இலக்கணம். இந்தப் பக்குவம் வர, இத்தனை நாளாகி இருக்கு!
மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் பேச்சு:
பிரதமர் மோடி கூறிய இரட்டை இன்ஜினா, ஒற்றை இன்ஜினா என்பதை விட, அது பாதுகாப்பான பயணமாக இருக்குமா என்பது தான் முக்கியம். தமிழகத்தில் ஆட்சி எனும் ரயில், தி.மு.க., எனும் ஒற்றை இன்ஜினில் மிகவும் பாதுகாப்பாகவே ஓடிக் கொண்டிருக்கிறது; சரியான பாதையில் பயணியரை அழைத்து செல்கிறது என்பதை, தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
பயணியான இவங்க கட்சிக்கு, தி.மு.க.,விடமிருந்து, 'வர வேண்டியதெல்லாம்' பாதுகாப்பா குறித்த நேரத்துக்கு வருதுங்கிறதை இப்படி சொல்றாரோ?

