இடதுசாரி கூட்டமைப்புக்குள் பிளவா? தனியே செயல்படும் கம்யூ., கட்சிகள்
இடதுசாரி கூட்டமைப்புக்குள் பிளவா? தனியே செயல்படும் கம்யூ., கட்சிகள்
ADDED : அக் 10, 2025 02:36 AM
தமிழகத்தில் கம்யூ., கட்சிகள் தனித்தனியே செயல்படுவதால், இடதுசாரி கூட்டமைப்பில் பிளவு அதிகரித்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலராக வீரபாண்டியன் பொறுப்பேற்ற பின், முதல் போராட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இ.கம்யூ., சார்பாக தமிழகம் முழுதும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சியில், வீரபாண்டியன் பங்கேற்கிறார்.
வழக்கமாக, ஒருமித்த கோரிக்கைகள் தொடர்பான போராட்டத்தில், இ.கம்யூ., -- மா.கம்யூ., ஆகிய இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது வழக்கம்.
தற்போது, இரு கட்சிகளும் தனித்தனியே ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றன. இதனால், இரு கட்சிகள் இடையே பிளவு அதிகரித்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, கம்யூ., வட்டாரங்கள் கூறியதாவது:
இடதுசாரி கூட்டமைப்பில், இ.கம்யூ., -- மா.கம்யூ., மார்க்சிஸ்ட் லெனிஸ்ட், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. ஒருமித்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தும்போது, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பங்கேற்பது வழக்கம். மா.கம்யூ., மாநில செயலராக பாலகிருஷ்ணன், இ.கம்யூ., மாநில செயலராக முத்தரசன் இருந்தபோது, இருவரும் இணைந்து போராட்டங்கள் நடத்தியது உண்டு.
ஆனால், மா.கம்யூ.,வின் தற்போதைய மாநில செயலர் சண்முகம், தனித்து செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில், சமீபத்தில் நடந்த காசா போர் நிறுத்தம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற விவகாரத்தில், இ.கம்யூ., சார்பில் தனியாக ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இப்படி இரு கம்யூ., கட்சிகளும் தனித்து செயல்பட ஆர்வம் காட்டி வருகின்றன.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -