ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறையில் சிருங்கேரி சுவாமிகள் 2 மணி நேரம் வழிபாடு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறையில் சிருங்கேரி சுவாமிகள் 2 மணி நேரம் வழிபாடு
ADDED : ஜூலை 07, 2025 03:21 AM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் இரண்டு மணி நேரம் சுவாமி, அம்மன் சன்னதி கருவறையில் சிறப்பு அபிேஷகம் பூஜை செய்து தரிசனம் செய்தார்.
நேற்று காலை 10:30 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகளுக்கு கோயில் குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின் சுவாமி சன்னதி கருவறைக்குள் சென்ற சிருங்கேரி சுவாமிகள் சிவலிங்கத்திற்கு மாவு பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், கங்கை, விபூதியில் அபிஷேகம் நடத்தி பூஜை செய்து மகா தீபாராதனை நடத்தினார். பின் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி கருவறை மற்றும் சேதுமாதவர் சன்னதி கருவறைக்குள் சென்று பூஜை செய்து மகாதீபாராதனை நடத்தி தரிசனம் செய்தார். 2:05 மணி நேரம் தரிசனம் செய்த சிருங்கேரி சுவாமிகள் மதியம் 12:35 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டார்.
பின் சிருங்கேரி மடத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மதியம் 3:15 மணிக்கு திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார்.
'தனுர் பானம்' பூஜை
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 6:30 மணிக்கு சிருங்கேரி சுவாமிகள் புறப்பட்டு தனுஷ்கோடி சென்றார். ராமாயண வரலாற்றில் சீதையை மீட்க ராமர் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு செல்ல முயன்ற போது கடல் அரசன் வழிவிட மறுத்ததாகவும், உடனே ராமர் அம்புவில்லை தொடுத்ததும் அச்சமடைந்த கடல் அரசன் அவரது முன் தோன்றி,''தாங்கள் அவதார புருஷர் மகாவிஷ்ணு. தற்போது மானிட உருவில் வந்துள்ளீர்கள், ஆகையால் வழிவிடவில்லை'' என வேண்டுவதாகவும், 'ஒரு வில், ஒரு சொல்' எனும் ராமர் கொள்கைக்கு ஏற்ப தொடுத்த வில்லை எய்து கடல் அரசனுக்கு உணவாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிகழ்வை போற்றும் வகையில் சிருங்கேரிசுவாமிகள் தனுஷ்கோடி கடற்கரை மணலில்வில்அம்பு வரைந்த பூ அலங்காரத்தில் தனுர் பானம் பூஜை செய்து, அதன் மணலை எடுத்து கடலில் கரைத்த பின் புனித நீராடினார். பின் காலை 8:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு திரும்பிய சிருங்கேரி சுவாமிகள் 22வது கோடி தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு மடத்திற்கு சென்றார்.