ADDED : நவ 09, 2025 02:25 AM

சென்னை: வடமாநிலங்களில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு விதுசேகர பாரதீ சன்னிதானம், நேற்று மாலை, 7:00 மணிக்கு டில்லி வந்தார்.
வரும், 30ம் தேதி வரை நடைபெறும் விஜய யாத்திரையில், டில்லி வசந்த் விஹார், பச்சிம் மார்கில் அமைந்துள்ள, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திராவில் தங்கி, பல்வேறு பொது நிகழ்ச்சிகள் மற்றும் கும்பாபிஷேகம் உள்ளிட்ட வைபவங்களில் பங்கேற்கிறார்.
மதுரா, பிருந்தாவன் போன்ற இடங்களுக்கும் செல்ல உள்ளார்.
டில்லியில் உள்ள ஸ்ரீசங்கர வித்யா கேந்திரா வளாகத்திற்கு, 1966 நவம்பர், 20ம் தேதி, சிருங்கேரி சாரதா பீடத்தின், 35வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ அபினவ வித்யா மஹாசுவாமிகள் முன்னிலையில், அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். 1967 ஜூன், 22ல் கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த, 1977 ஏப்ரல் 16 முதல் மே, 23ம் தேதி வரை, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின், 35வது பீடாதிபதி ஜகத்குரு அபினவ வித்யா தீர்த்த மஹாசுவாமிகள் மற்றும் தற்போதைய 36வது பீடாதிபதி ஜகத்குரு பாரதீ தீர்த்த மஹாசன்னிதானம் ஆகியோர் விஜயம் செய்து, ஸ்ரீ சங்கர ஜயந்தி உத்சவத்தை நிகழ்த்தினர்.
அதன்பின், 1982 ஜூலை 4ல், இரு ஆச்சார்ய சுவாமிகளும் டில்லிக்கு விஜயம் செய்து, செப்டம்பர், 5ம் தேதி வரை தங்கி, 'சாதுர்மாஸ்ய' விரதத்தினை அனுஷ்டித்தனர். அதேபோல, 1994ல், தற்போதைய 36வது பீடாதிபதி ஜகத்குரு பாரதீ தீர்த்த மஹாசன்னிதானம் மீண்டும் தனது சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார்.
தற்போது, 31 ஆண்டுகளுக்கு பின், ஜகத்குரு விதுசேகர பாரதீ சன்னிதானம் டில்லிக்கு விஜயம் செய்துள்ளார்.
இதற்கான ஏற்பாட்டை, ஸ்ரீ சங்கர வித்யா கேந்திராவின் தலைவர் எஸ்.லக்ஷ்மி நாராயணன், செயலர் நடராஜன், ஸ்ரீ மடத்தின் தலைமை அதிகாரி பி.ஏ.முரளி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்.வெங்கடராமன் உள்ளிட்ட கமிட்டி அங்கத்தினர் செய்துள்ளனர்.

