59,000 பேருக்கு வரும் 29ல் எஸ்.எஸ்.சி., மறு தேர்வு
59,000 பேருக்கு வரும் 29ல் எஸ்.எஸ்.சி., மறு தேர்வு
ADDED : ஆக 27, 2025 12:19 AM
சென்னை:எஸ்.எஸ்.சி., தேர்வில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், நாளை மறுநாள், 59,000 பேருக்கு மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி., சார்பில், நிலை 13க்கான தேர்வுகள், கடந்த மாதம், 24 மற்றும் இந்த மாதம், 2ம் தேதிகளில் நடந்தன. 142 நகரங்களில், 194 மையங்களில், 5 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வின் போது, பல்வேறு தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், கணினி வழி தேர்வை எழுத முடியவில்லை.
இதுகுறித்து, தேர்வு மையங்களில் புகார் அளித்தும் சரி செய்ய முடியாததால், தேர்வை முடித்த பின், அதில் பங்கேற்றவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், எஸ்.எஸ்.சி., நிர்வாகம் பதில் அளிக்காத நிலையில், நேற்று முன்தினம் டில்லியில் உள்ள எஸ்.எஸ்.சி., தலைமையகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து நடந்த விசாரணையில், தேர்வு பணியில் ஈடுபட்ட, நான்கு ஏஜன்சிகளின் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. 'தேர்வை சரிவர எழுத முடியாத, 59,000 பேருக்கு, மூன்று வேளைகளில், வரும், 29ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும்; தவறுக்கு காரணமான ஏஜன்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, எஸ்.எஸ்.சி., தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டோர் விபரங்கள், எஸ்.எஸ்.சி., இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளதால், அவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, மறு தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.