டாக்டருக்கு கத்திகுத்து; முதல்வர் மீது மக்களுக்கு அவநம்பிக்கை; அண்ணாமலை கண்டனம்
டாக்டருக்கு கத்திகுத்து; முதல்வர் மீது மக்களுக்கு அவநம்பிக்கை; அண்ணாமலை கண்டனம்
UPDATED : நவ 13, 2024 03:43 PM
ADDED : நவ 13, 2024 03:30 PM

சென்னை: குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதல்வர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் சிகிச்சை பிரிவு டாக்டர் பாலாஜி, கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜி, விரைந்து நலம்பெற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஏற்கனவே பல முறை, டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள் என தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தும், தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு முறையும் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளின் போது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுவதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், தொடர்ச்சியாக பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகியிருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம், நெல்லை அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த வாரம், திருச்சி இ.எஸ்.ஐ., மருத்துவமனை வளாகத்தில், டாக்டர் மீது தி.மு.க., உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து, டாக்டர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, டாக்டர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதல்வர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தி.மு.க., அரசு உணர வேண்டும், என தெரிவித்துள்ளார்.
யார் பொறுப்பு?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: மக்களுக்கு தரமான சிகிச்சை இல்லை! டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை!இவை எதைப்பற்றியும் சிந்திக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு நேரமில்லை! அதோடு சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று ஸ்டாலின் ஆட்சியில் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை! அனைத்து விவகாரங்களிலும் அறிவுடன் பேசுவதாக எண்ணி ஆணவத்துடன் பதில் அளிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன் துறையில் நடக்கும் தொடர் சீர்கேடுகளுக்கு யார் பொறுப்பு?, எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பில்லை
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்; கடந்த மூன்றரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் ரயில், பேருந்துகளில் பயணிப்போருக்கு பாதுகாப்பு இல்லை. அரசு ஊழியர்களுக்கு, மருத்துவமனைகளில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பு இல்லை, இன்னும் சொல்லப்போனால் போலீசாருக்கே பாதுகாப்பே இல்லை என்ற அவல நிலை தான் நிலவுகிறது.
அதே சமயத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ரவுடிகளும், சமூக விரோதிகளும், கொலைகாரர்களும், கொள்ளையடிப்போரும், தீவிரவாத, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் கத்தியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார் என்றால், அந்த மருத்துவமனையில் போலீசாரின் பாதுகாப்பே இல்லை என்று தான் அர்த்தம். அரசு டாக்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், அரசு மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டினை செய்யாத தி.மு.க., அரசுக்கும் எனது கடும் கண்டனம், எனக் குறிப்பிட்டுள்ளர்.
கைவிடுங்க
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை, கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை டாக்டர் பாலாஜியை, நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவம் கடுமையான கண்டனத்திற்குரியது.
டாக்டர்களுக்கும், மருத்துவமனையில் வேலை செய்பவர்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு கடுமையான தண்டனை அளிக்கவேண்டும். வேலை நிறுத்தம் செய்யும் டாக்டர்களிடம் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்.
டாக்டர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, மருத்துவமனைகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு டாக்டர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் கடமை
தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டரை தாக்கியது கண்டனத்துக்குறியது. மேலும் டாக்டரை தாக்கிய அந்த இளைஞருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் டாக்டர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை உள்ளது. தமிழக அரசு உடனடியாக டாக்டர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனையை தரவேண்டும். சட்டம், ஒழுங்கு இன்றைக்கு சீர்குலைந்து, கேள்விக்குறியாக உள்ளது.
இதுபோன்ற நிகழ்வு நடப்பது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கடவுளுக்கு அடுத்ததாக உயிரை காப்பாற்றும் பணியை செய்பவர்கள் தான் டாக்டர்கள். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய்க்கு சிகிச்சை அளித்தும், எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத விரக்தியில் அந்த இளைஞன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. அதன் உண்மை நிலை அறிந்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய்க்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற வேண்டியதும் அரசின் கடமையாகும்.
அதேபோல், மனநிலையால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் எதற்காக கொடூர செயலில் கத்தியால் தாக்கினான் என்ற உண்மை நிலையை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி, டாக்டர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது தமிழக அரசின் கடமையாகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.