வக்ப் மசோதாவை ரத்து செய்ய தி.மு.க., வழக்கு : ஸ்டாலின் அறிவிப்பு
வக்ப் மசோதாவை ரத்து செய்ய தி.மு.க., வழக்கு : ஸ்டாலின் அறிவிப்பு
UPDATED : ஏப் 03, 2025 11:55 PM
ADDED : ஏப் 03, 2025 11:24 PM

சென்னை, ஏப். 4- ''மத்திய அரசின், வக்ப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக, தி.மு.க., சார்பில் வழக்கு தொடரப்படும்,'' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபை நேற்று காலை 9:30 மணிக்கு கூடியதும், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கருப்பு 'பேட்ஜ்' அணிந்து வந்தனர். கேள்வி நேரம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மத நல்லிணக்கத்திற்கும், முஸ்லிம் மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும், வக்ப் சட்ட திருத்த முன்வடிவை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என, கடந்த மாதம் 27ம் தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். பா.ஜ., நீங்கலாக, அனைத்து கட்சிகளாலும் ஒருமனதாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளால், இந்த வக்ப் சட்ட திருத்தம் எதிர்க்கப்பட்டது. அனைத்தையும் மீறி, லோக்சபாவில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது கண்டனத்துக்கு உரியது.
மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், எதிர்த்தவர்கள் எண்ணிக்கை 232 என்பது சாதாரணமானது அல்ல. இந்த சட்ட திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; முழுமையாக திரும்ப பெற வேண்டியது.
பெரும்பான்மை கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, ஒரு சில கூட்டணி கட்சிகளின் தயவால், அதிகாலை 2:00 மணியளவில், இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது, இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்; மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்.
இதை உணர்த்தும் வகையில் கருப்பு சின்னம் அணிந்து, சட்டசபை நடவடிக்கைகளில் பங்கெடுத்துள்ளோம். சர்ச்சைக்குரிய இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும். வக்ப் வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தமிழகம் போராடும்; அதில், வெற்றியும் பெறும். அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டப்பூர்வமாகவே தடுப்போம்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
அ.தி.மு.க., - வேலுமணி: முன்னோர்கள் தானமாகக் கொடுத்த சொத்துக்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் சிறுபான்மையினருக்கு இருக்கிறது. மத்திய அரசு, சிறுபான்மையினருடன் கலந்து பேசி, அச்சத்தை போக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்னையை பொறுத்தவரை, அரசு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க., ஆதரவாக இருக்கும்.
* பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: இந்த சட்டத்திருத்த மசோதாவில் உள்ள 16 அம்சங்கள், பார்லிமென்ட் கூட்டுக் குழுவால் ஏற்கப்பட்டுள்ளன. இது முழுக்க முழுக்க வக்ப் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயம். இதை, மத ரீதியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. முதல்வர் கொண்டு வந்த அறிவிப்பை ஏற்கவில்லை. நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
* சபாநாயகர் அப்பாவு: இது தீர்மானம் இல்லை; வெளியே செல்ல வேண்டாம்; உட்காருங்கள். சபைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.
* நயினார் நாகேந்திரன்: நாங்கள் வெளியே செல்கிறோம்; பேசிவிட்டு மீண்டும் வருகிறோம். இதைத்தொடர்ந்து, சபையில் இருந்து நயினார் நாகேந்திரன், காந்தி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அப்போது, வானதி, சரஸ்வதி ஆகியோர் சபையில் இல்லை.