'அப்பா, அம்மா என்ற பெயர்களை மாற்றி விடாதீர்கள் ஸ்டாலின் '
'அப்பா, அம்மா என்ற பெயர்களை மாற்றி விடாதீர்கள் ஸ்டாலின் '
ADDED : அக் 09, 2025 01:50 AM

திருச்செங்கோடு: சட்டசபை தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் பிரசாரம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து, மைதானத்தில், அவரது பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. கரட்டுப்பாளையம் பகுதியில் அவர் பேசியதாவது:
இந்த பிரசார கூட்டம், மழை வந்ததால் முதல் முறையும், கரூர் துயர நிகழ்வின் காரணமாக இரண்டாவது முறையும் தள்ளிப்போனது. தற்போது, நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் நடக்கும் முதல் கூட்டமே வெற்றிகரமாக அமைந்துவிட்டது.
கரூரில், வேண்டுமென்றே திட்டமிட்டு, அந்த கூட்டம் சரியான முறையில் நடைபெற கூடாது என்பதற்காக பிரச்னை உருவாக்கப் பட்டதாக தகவல்.
அ.தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என, ஸ்டாலின் கூறி வருகிறார். திருச்செங்கோடு தொகுதியில் மட்டும், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாருமில்லை.
இனிமேல், மருத்துவமனைகளில், 'பயனாளிகள்' என்று சொல்ல வேண்டுமாம். பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாமா? அப்பா, அம்மா என்ற இரண்டு பெயரை மட்டும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள். விட்டால், அந்த பெயர்களையும் மாற்றி விடுவார். எல்லாவற்றுக்கும் இரண்டாவது பெயர் வைக்கும், இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது.
அ.தி.மு.க., ஆட்சியின்போது, 1621 கோடி ரூபாயில், கோவையில் 10 கி.மீ., நீளமான பாலம் அமைக்க திட்டமிட்டு, 55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. அதை கிடப்பில் போட்டு விட்டு, இப்போது திறக்கிறார். நாம் பெற்ற பிள்ளைக்கு, அவர் பெயர் வைக்கிறார். எங்கு பார்த்தாலும் நாம் போட்ட திட்டத்துக்கு அவருடைய அப்பா பெயர் வைக்கிறார்.
இந்தியாவிலேயே, சூப்பர் முதல்வர் ஸ்டாலின் என்று அவரே சொல்கிறார். ஆனால், எதில் சூப்பர் முதல்வர்? பொய் பேசுவதில், கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வர்.
இவ்வாறு அவர் பேசினார்.