பதிவு உரிமம் இல்லாமல் பலகாரம் தயாரித்தால் நடவடிக்கை
பதிவு உரிமம் இல்லாமல் பலகாரம் தயாரித்தால் நடவடிக்கை
ADDED : அக் 09, 2025 01:48 AM
சென்னை:'உணவு பாதுகாப்பு துறையினரிடம் பதிவு உரிமம் பெறாமல், இனிப்பு, காரம் உள்ளிட்டவை தயாரித்து விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு, காரம் தயாரிப்பவர்களும், அவற்றை விற்பனை செய்பவர்களும், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்கும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். அவ்வாறு பெறாமல், விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு விற்பனை செய்வோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பதிவு உரிமம் பெற்று இனிப்பு, காரம் தயாரிப்போர், தரமான மூலப்பொருட்களை வைத்து, சுத்தமாக, சுகாதாரமாக, கலப்படமின்றி, உணவுப் பொருட்களை தயாரிக்க வேண்டும்.
இனிப்பு, காரம் தயாரிப்புக்கு, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, தரமான எண்ணெய், நெய்யை பயன்படுத்த வேண்டும்.
'கிப்ட்' பாக்ஸ்களில் பேக்கிங் செய்யப்படும் இனிப்பு, காரம், பழ வகைகள் கண்டிப்பாக, உணவு பாதுகாப்பு துறையின் 'லேபிள்' விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்யப்பட வேண்டும்.
வாடிக்கையாளர்கள், தரமில்லாத உணவுகள் விற்கப்படுவதை அறிந்தால், 94440 42322 என்ற 'வாட்ஸாப்' எண்ணில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.