ரூ.120 கோடியில் கட்டிய கட்டடங்களை திறந்தார் ஸ்டாலின்
ரூ.120 கோடியில் கட்டிய கட்டடங்களை திறந்தார் ஸ்டாலின்
ADDED : மே 21, 2025 01:04 AM

சென்னை:தமிழகம் முழுதும், 120 கோடி ரூபாய் மதிப்பில், உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை ராணி மேரி கல்லுாரி வளாகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், 42 கோடி ரூபாயில், மாணவியர் விடுதி கட்டடம் ஐந்து தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இதில், 455 மாணவியர் தங்கும் அறைகள், கருத்தரங்க அறை, லிப்ட், 'சிசிடிவி' கண்காணிப்பு, நவீன சமையல் அறை, உணவருந்தும் கூடம், மருத்துவர் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இக்கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ராஜ்யசபா எம்.பி., வில்சன் தொகுதி மேம்பாட்டு நிதியில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில், 'கலையரங்கம்' கட்டவும், முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அத்துடன், சென்னை பல்கலை மெரினா வளாகத்தில் 28.5 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, ஆராய்ச்சி மாணவர்களுக்கான விடுதி கட்டடம்; சிவகங்கை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், துாத்துக்குடி, பெரம்பலுார், புதுக்கோட்டை ராணிப்பேட்டை, வேலுார், தென்காசி மாவட்டங்களில், 51.50 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, உயர்கல்வித் துறை கட்டடங்கள் போன்றவற்றையும், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் திறந்து வைத்தார்.
பல்வேறு மாவட்டங்களில், கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில், 207 கோடி ரூபாயில் கட்டடங்கள் கட்டவும் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முத்துசாமி, கோவி.செழியன், உயர்கல்வித் துறை செயலர் சமயமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.