ரூ.1,141 கோடியில் அமைக்கப்பட்ட செங்கல்பட்டு - தி.மலை இணைப்பு சாலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.1,141 கோடியில் அமைக்கப்பட்ட செங்கல்பட்டு - தி.மலை இணைப்பு சாலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ADDED : பிப் 21, 2025 01:24 AM

சென்னை:செங்கல்பட்டு - திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில், 1,141 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 16,421 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், 2,000 இடங்களில் பாலங்கள், சிறு பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன், 1,141 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், 109 கி.மீ.,க்கு செய்யூர் - பனையூர் இணைப்பு மற்றும் செய்யூர் - வந்தவாசி - போளூர் சாலை, 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டு உள்ளது.
மருதநாடு, வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய மூன்று ஊர்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், ஐந்து உயர்மட்ட பாலங்கள், 14 சிறு பாலங்கள், 225 குறு பாலங்கள் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளன.
சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தெரு விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், கழிப்பறைகளுடன் கூடிய பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சாலையின் இரண்டு புறங்களிலும், 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.
கிழக்கு கடற்கரை சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில், இந்த சாலை அமைந்துள்ளது.
புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும். செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள, 67 கிராமங்களுக்கு விவசாய விளைபொருட்களை எடுத்து செல்லவும், அருகில் உள்ள நகர்ப்புற பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு பொது மக்கள் எளிதாகவும் செல்ல முடியும்.
இந்த சாலையை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று பொது பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை செயலர் முருகனாந்தம், நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ், சென்னை - கன்னியாகுமரி தொழில்தட திட்ட தலைமை பொறியாளர் ஜெபசெல்வின் ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.