'ஆட்சி பறிபோய்விடும் பயம் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது'
'ஆட்சி பறிபோய்விடும் பயம் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது'
ADDED : ஆக 02, 2025 01:05 AM

துாத்துக்குடி : ''என் பிரசாரத்துக்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும், முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அவர், கோவில்பட்டியில் நேற்று பேசியதாவது:
மக்கள் விரோத ஆட்சியான தி.மு.க., ஆட்சி எப்போது அகற்றப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
ஆட்சி பறிபோய் விடும் என்ற பயத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். தி.மு.க., நல்லது செய்ததாக சரித்திரமே கிடையாது.
அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கி விடும் என ஸ்டாலினும், அவரது கூட்டணி கட்சியினரும் அவதுாறு பிரசாரம் செய்து வருகின்றனர்.
எங்கள் கூட்டணியில் இதனால் கலகம் பிறக்காதா என்ற நப்பாசையில் ஏதேதோ பேசுகின்றனர். அதையெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெறும் அளவுக்கு எங்களுக்கு சக்தி உள்ளது.
பா.ஜ., மதவாத கட்சி என ஸ்டாலின் அவதுாறு பரப்புகிறார். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. மூன்று முறை ஆட்சி அமைத்து, சிறப்பாக செயல்பட்டு, உலக நாடுகள் பிரதமர் மோடியை பாராட்டுகின்றன.
தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொள்கை கிடையாது. இருந்தபோதும், ஒத்த கொள்கையுடன் உள்ளோம் என முதல்வர் கூறுகிறார். அப்புறம் எதற்கு தனித்தனி கட்சி; தி.மு.க.,வுடன் இணைந்துவிட வேண்டியது தானே.
கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. இப்படியே கடன் வாங்கிக் கொண்டிருந்தால், தமிழகம் திவாலாகிவிடும். தி.மு.க., ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எங்கும் வெளிப்படைத்தன்மை இல்லை.
என் பிரசாரத்துக்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும், முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பா .ஜ., மாநில தலைவர் நாகேந்திரன் என்னுடன் தான் இருக்கிறார். ஆனாலும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பொருந்தா கூட்டணி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.

