முதல்வரானதன் நோக்கம் நிறைவேறியது தர்மபுரியில் ஸ்டாலின் பெருமிதம்
முதல்வரானதன் நோக்கம் நிறைவேறியது தர்மபுரியில் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : ஆக 18, 2025 01:39 AM

தர்மபுரி,: ''நான் முதல்வர் ஆனதன் நோக்கம் நிறைவேறிக் கொண்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தர்மபுரி மாவட்டம் தடங்கத்தில் நேற்று நடந்த அரசு விழாவில், 362.77 கோடி ரூபாய் மதிப்பில், 73 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 512.52 கோடி ரூபாய் மதிப்பில், 1,044 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 70,427 பயனாளிகளுக்கு, 830 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நிகழ்ச்சிக்கு வரும் முன், இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகள் நலன் கருதி, கால தாமதத்தை தவிர்க்க, கூட்டுறவு வங்கிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் மூலம் பயிர்க்கடனுக்கு விண்ணப்பித்த அன்றே, வங்கி கணக்கில் பயிர்க்கடன் நேரடியாக வழங்கும் நடைமுறையை துவக்கி வைத்தேன்.
மரகத பூஞ்சோலை
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, 2008-ல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை, 7,890 கோடி ரூபாய் செலவில் தற்போது செய்து கொண்டிருக் கிறோம்.
தர்மபுரி மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத எட்டு கிராம மக்களுக்கு, 40 புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. 1,297.40 கோடி ரூபாய் மதிப்பில் சாலை பணிகள், 1,714 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
பொதுப்பணித்துறை சார்பில், 30.08 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள், சுற்றுலாத்துறை சார்பில், 19.81 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள், நார்த்தம்பட்டி பஞ்சாயத்தில் மரகத பூஞ்சோலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
நிலம் ஒதுக்கீடு
தர்மபுரி மாவட்ட மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான, சிப்காட் தொழில்பூங்கா திட்டம் இன்று திறக்கப்பட்டிருக்கிறது. இணையதளம் மூலம், 200 ஏக்கர் நிலத்தில் தொழில் முனைவோருக்காக நிலம் ஒதுக்கீடு பணி நடக்கிறது.
இதில் ஏழு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கி இன்று வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த நான்காண்டு காலத்தில், தர்மபுரி மாவட்டத்திற்கு மட்டும், 447.26 கோடி ரூபாயில், 43,86,926 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 தேர்தலுக்கு முன், 'விடியல் பயணம் திட்டம்' குறித்த வாக்குறுதி அளித்தபோது, எதிர்க்கட்சியினர் நிறைவேற்ற முடியாது என்று கூறினர். மேலும் பஸ் கட்டணத்தை உயர்த்தி விடுவர் என, கதை, திரைக்கதை, வசனமாக எழுதத் துவங்கினர்.
ஆனால், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் நிதி நிலையை பாழ்படுத்தியதையும் மீறி, ஆட்சி பொறுப்பேற்றவுடன், 'விடியல் பயணம்' திட்டத்துக்கு கையெழுத்திட்டேன்.
இதன் மூலம், பெண்கள் மாதம், 1,000 ரூபாய் என, 51 மாதத்தில், 50,000 ரூபாய் சேமித்துள்ளனர்.
கவர்னருக்கு கண்டனம்
தி.மு.க., ஆட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் அவதுாறுகளை அள்ளி வீசி வருகின்றனர். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
அவர்களை விடவும் மலிவான அரசியல் செய்பவர்களில் ஒருவராக கவர்னர் ரவி உள்ளார்.
தமிழகத்தின் கல்வி, சட்டம்- - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம், உண்மைக்கு புறம்பாக, இல்லாதது, பொல்லாததை சொல்லி பீதியை கிளப்புவார். இதை மட்டும் தான் செய்கிறார்.
தன் கோபத்தை புலம்பலாக, பொதுமேடைகளில் கொட்டித் தீர்க்கிறார்.
பள்ளிக்கல்வியில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது. தமிழகம் அமைதி மாநிலமாக இருப்பதால் தான், நான்காண்டு காலத்தில், 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்திருக் கிறோம்.
கடந்த 2022ம் ஆண்டு அறிக்கைப்படி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில், பா.ஜ., கட்சி ஆளும் உத்தர பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது.
கவர்னர் அவர்களே, நீங்கள் கம்பு சுற்ற வேண்டியது இங்கில்லை. -பா.ஜ., ஆளக்கூடிய மாநிலங்களுக்கு சென்று கம்பு சுற்றுங்கள்.
மகிழ்ச்சி
கடந்த இரு வாரங்களில் மூன்று திட்டங்களை துவங்கி வைத்திருக்கிறேன். அதில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், 3,561 முகாம்களில், 3,41,395 பேர் இதுவரை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில், 74 முகாம்களில், 92,841 பேர் பயனடைந்து உள்ளனர்.
'தாயுமானவர்' திட்டத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் என, 21 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் பொருள் வீடு தேடி சென்று வழங்கப்படுகிறது.
நான் முதல்வரானதன் நோக்கம் நிறைவேறி கொண்டிருப்பதை நினைத்து, மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். திராவிட மாடல், 2.0 ஆட்சியில், இந்திய அளவில் அனைத்து துறையிலும் வளர்ந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.