ADDED : ஜூன் 01, 2025 04:11 AM
மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தன் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியை அவரது வீட்டில் சந்தித்தார். அங்கு இரவு உணவு சாப்பிட்டார்.
தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அரசியலிலிருந்து ஒதுங்கி உள்ளார். முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற நிகழ்ச்சியில் அழகிரி சார்பில் அவரது மகன் தயாநிதி பங்கேற்றார்.
அதன் பிறகு மதுரை வந்த போதெல்லாம் அழகிரியை சந்திப்பதை தவிர்த்தார் ஸ்டாலின். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையிலிருந்த தயாநிதியை பார்க்க சென்ற போது அழகிரியை சந்தித்தார் ஸ்டாலின்.
இந்நிலையில் மதுரையில் இன்று நடக்கும் தி.மு.க., பொதுக்குழுவில் பங்கேற்க ஸ்டாலின் நேற்று வந்தார். ஸ்டாலினை சில நாட்களுக்கு முன் அலைபேசியில் தொடர்பு கொண்ட அழகிரி டி.வி.எஸ்.நகரிலுள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
நேற்றிரவு ரோடு ஷோ, மதுரை முதல் மேயர் முத்து சிலை திறப்பு விழாவை முடித்து கொண்டு, பந்தல்குடி கால்வாயை ஆய்வு செய்த பின் சர்க்கியூட் ஹவுஸ் சென்றார் ஸ்டாலின்.
பின் அங்கிருந்து தனி காரில் பாதுகாவலருடன் புறப்பட்டு இரவு 9:57 மணிக்கு அழகிரி வீட்டிற்கு சென்றார். அங்கு இரவு உணவு சாப்பிட்டார்.