‛‛அப்பா'' ‛‛அப்பா'' - புதிய பட்டத்தை நிறுவும் முயற்சியில் ஸ்டாலின்: ‛‛அம்மா''வுக்கு போட்டியா?
‛‛அப்பா'' ‛‛அப்பா'' - புதிய பட்டத்தை நிறுவும் முயற்சியில் ஸ்டாலின்: ‛‛அம்மா''வுக்கு போட்டியா?
UPDATED : பிப் 20, 2025 05:48 AM
ADDED : பிப் 19, 2025 01:17 PM

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில் ஒரு தலைவரை அவரது கட்சியினர் ‛‛அப்பா'', ‛‛அப்பா'' என்று அழைக்க வைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
முயற்சிப்பவர் - முதல்வர் ஸ்டாலின்
அழைக்க வேண்டியவர்கள் - திமுகவினர்
தமிழக மக்கள் எப்போதுமே உணர்ச்சி வசப்படுபவர்கள். இதனால் தான் நடிகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பட்டப் பெயர் வைத்து, அதை பெருமையாக அழைக்கும் வழக்கமும் வந்தது.
‛‛அம்மா''
பட்டப் பெயரால் அதிகம் அழைக்கப்பட்டவர் அதிமுக தலைவியாக இருந்த ஜெயலலிதா தான். அவரது கட்சியினர் அவரை ‛‛அம்மா'' என்றே அழைத்தனர். ‛‛புரட்சித் தலைவி'' என்று ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட முதல் பட்டப் பெயர், ‛‛இதய தெய்வம்'' என்று ஆகி, பின்னர் ‛‛அம்மா''வில் வந்து நின்றது. ஜெயலலிதாவும் அதைத் தான் ரசித்தார்.
அவரது ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்த மலிவு விலை உணவு கடைக்கு ‛‛அம்மா உணவகம்'' என்றும், மலிவு விலை குடிநீருக்கு ‛‛அம்மா குடிநீர்'' என்றும் அவரே பெயர் வைத்தார். ஒரு கட்டத்தில் ‛‛அம்மா'' என்றாலே அது ஜெயலலிதா மட்டுமே என்று ஆகிவிட்டது.
‛‛அப்பா''வாக விரும்பும் ஸ்டாலின்
இந்நிலையில் தான் ‛‛அம்மா'' இல்லாத இடத்தை ‛‛அப்பா''வை வைத்து நிரப்பலாம் என்ற யோசனைக்கு ஸ்டாலின் வந்துள்ளார்.
ஸ்டாலினுக்கு ஏற்கனவே ‛‛தளபதியார்'' என்ற பட்டப் பெயர் இருந்தாலும் அது போதவில்லை என்று அவர் நினைக்கிறார் போல. சமீப காலமாக அவர் தொடங்கி வைத்த முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், கல்லுாரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்ட துவக்க விழாக்களில் பேசும்போதெல்லாம், ‛‛மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று அழைக்கும்போது எனக்கு ஆனந்தமாக இருக்கிறது'' என்று சொல்லி பூரிப்படைந்தார்.
பிப்.19ல் நடந்த மாணவர்களுக்கு தொடர்பு இல்லாத வட சென்னை வளர்ச்சி திட்ட விழாவில் பேசும்போது கூட, ‛‛மாணவர்கள் என்னை அன்புடன் அப்பா, அப்பா என்று அழைக்கின்றனர்'' என்று கூறி பெருமைப் பட்டார்.
அவர் இப்படி பேசுவதில் ஒரு முக்கியமான தகவல் ஒளிந்து இருக்கிறது. என்னை இனிமேல் ‛‛அப்பா'' என்று குறிப்பிடுங்கள் என தனது கட்சியினருக்கு சொல்லாமல் சொல்கிறார். இதை கட்சியினரும் புரிந்து கொண்டுள்ளனர். இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள், ‛‛தளபதியார் அப்பா'' அவர்களே, ‛‛முதல்வர் அப்பா'' அவர்களே என்றெல்லாம் போற்றிப் பேச துவங்குவார்கள். போகப் போக தளபதியாரும், முதல்வரும் தேய்ந்து போய், ‛‛அப்பா'' மட்டுமே நிற்கும்.
சூட்டப்படும் பட்டங்கள் எல்லாமே நிலைப்பதும் இல்லை; சூட்டப்படாத பட்டப் பெயர்கள் தானாக உருவாகி நிலைப்பதும் உண்டு. ஸ்டாலின் விஷயத்தில் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.