பழனிசாமி கருத்தை மதிக்காத ஸ்டாலின் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாபம்
பழனிசாமி கருத்தை மதிக்காத ஸ்டாலின் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாபம்
ADDED : டிச 03, 2024 07:04 PM
மதுரை''எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமல் ஏதோ முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான், இந்த தமிழகத்தை காக்க பிறந்த 'அவதார புருஷர்' போல் செயல்பட்டதால், 14 மாவட்டங்களில் 69 லட்சம் குடும்பங்கள், ஒன்றரை கோடி பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என, சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் மிகப்பெரிய பேரழிவை 'பெஞ்சல்' புயல் ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் ஆலோசனைகளை கருத்தில் கொள்வதில்லை என்பது போல முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஏதோ தான் மட்டுமே, இந்த தமிழகத்தை காக்க பிறந்த அவதார புருஷர் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய செயல்பாட்டுக்கு கிடைத்த பலனாக, தமிழகத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 69 லட்சம் குடும்பங்களின் ஒன்றரை கோடி பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயல், மழைக்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுத் தரப்பு சரியாக செய்யவில்லை. நிவாரண முகாமில் மக்களுக்கு மருந்து, உணவுப்பொருட்கள் இல்லை.
பழனிசாமி அரசியல் நாகரிகத்தோடு கருத்துக்களை முன் வைக்கும் பண்பான மனிதர். அவர், நாட்டு மக்களுக்காக, முதல்வர் ஸ்டாலினை நோக்கி விமர்சனங்களை, தன்னுடைய கருத்தாக வைத்து பேசினால், அதை தேசக் குற்றம் போல முதல்வர் பேசுவது சரியல்ல.
பழனிசாமி, தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது, அரசு மீதும் அ.தி.மு.க., அமைச்சர்கள் மீதும் அபாண்டமாக பொய்களை தினமும் கூறுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
ஆனால், அவர் கூறியதை எல்லாம் சகிப்புத்தன்மையோடு, பொறுமையின் அடையாளமாக பழனிசாமி கேட்டது மட்டுமல்ல; மக்கள் நலனுக்கு உரிய எந்தக் கருத்தையும் புறக்கணிக்காமல், அதன் மேல் நடவடிக்கையும் எடுத்தார்.
ஆனால், ஸ்டாலின் என்ற தனிப்பட்ட நபரிடம் கோரிக்கை எழுப்பி, அதை சரி செய்ய பழனிசாமி விழைவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார். முதல்வர் என்ற பதவிக்கு தான் கோரிக்கை வைத்திருக்கிறார். ஸ்டாலினின், தான் தோன்றித்தனமான செயல்பாடுகளாலும், மழை, புயலுக்கு எடுக்க வேண்டிய முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமையாலும், பொதுமக்கள் இன்று சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இது சாதாரண விஷயம் இல்லை; அதற்கான விலையை ஸ்டாலினும் தி.மு.க.,வினரும் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.