திருநெல்வேலி அல்வாவை விட மத்திய அரசு அல்வா தான் 'பேமஸ்' நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் கிண்டல்
திருநெல்வேலி அல்வாவை விட மத்திய அரசு அல்வா தான் 'பேமஸ்' நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் கிண்டல்
ADDED : பிப் 07, 2025 10:43 PM

திருநெல்வேலி:''திருநெல்வேலி
அல்வா புகழ் பெற்றதென்றால் மத்திய அரசு மாநிலங்களுக்கு தரும் அல்வா அதை
விட புகழ் பெற்றதாக இருக்கிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நெல்லையில் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:
கடந்த,
2023 டிசம்பரில் இங்கு எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்று தெரியும்.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, துாத்துக்குடி உள்ளிட்ட தென்
மாவட்டங்கள் எப்படியெல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பதும் தெரியும்.
அதிலிருந்து
மீள மத்திய அரசிடம் நிதி கேட்டோம். இரண்டு மத்திய அமைச்சர்கள் வந்தனர்.
உடனடியாக இடைக்கால நிதியுதவி கூட செய்யவில்லை. இங்கிருக்கும் நயினார்
நாகேந்திரன் கோபித்துக் கொள்ளக்கூடாது. அவருக்கும் உண்மை தெரியும். ஆனால்,
அவர் பேசமாட்டார். நீங்கள் பேசுங்கள் என்று தான் எனக்கு அனுமதி கொடுப்பார்.
(அப்போது நயினார் நாகேந்திரன் தர்மசங்கடத்துடன் இல்லை என கையை அசைத்து
மறுத்தார்)
இருந்தாலும் மாநில அரசின் நிதியை வைத்து நிவாரண பணிகளை
செய்தோம். தொடர்ந்து, மத்திய அரசிடம் நிதி கேட்டு வலியுறுத்தினோம்.
கொடுக்காத அவர்களை கண்டித்தோம்; அப்போதும் வரவில்லை. லோக்சபாவில்
பேசினோம்; அப்போதும் வரவில்லை. நீதிமன்றம் சென்றோம். பிறகு தான் மத்திய
அரசு தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி அறிவித்தது.
நாம் கேட்டது,
37,907 கோடி ரூபாய். மத்திய அரசு கொடுத்தது வெறும் 276 கோடி ரூபாய்.
கேட்டதில் ஒரு விழுக்காட்டை கூட கொடுக்கவில்லை. இப்படி தான் மத்திய அரசு
நடந்து கொண்டிருக்கிறது. சரி போகட்டும், இந்த பட்ஜெட்டிலாவது நாங்கள் கேட்ட
நிதிகளை ஒதுக்கித் தருவர் என, எதிர்பார்த்தோம்; அதுவும் இல்லை.
தமிழகத்திற்கு நிதியும் கிடையாது; நீதியும் கிடையாது என, ஒதுக்கி விட்டனர்.
மீண்டும், மீண்டும் வஞ்சிக்கிறது மத்திய பா.ஜ., அரசு.
அவர்களை
பொறுத்தவரை கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கும், தேர்தல் வரும்
மாநிலங்களுக்கும் மட்டும் தான் அறிவிப்புகளையும், நிதியையும் கொடுப்பர்.
அதனால் தான் நாங்கள் கேட்கிறோம். இந்தியாவின் வரைபடத்தில் மட்டும், தமிழகம்
இருந்தால் போதுமா? அரசாங்கம் வெளியிடும் நிதிநிலை அறிக்கையில் இருக்க
வேண்டாமா? மத்திய அரசின் திட்டங்களில் தமிழகம் பெயர் இருக்க வேண்டாமா?
தமிழகத்திற்கு சிறப்புத்திட்டங்களை அறிவிக்க வேண்டாமா?
தேர்தல்
நேரத்தில் ஓட்டு கேட்க மட்டும் தமிழகத்திற்கு வந்தால் போதும் என்று
நினைக்கின்றனரா? இப்படி நாங்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும் பா.ஜ.,விடம்
இருந்து எந்த பதிலும் வராது. திருநெல்வேலி அல்வா புகழ் பெற்றதென்றால்,
மத்திய அரசு மாநிலங்களுக்கு தரும் அல்வா அதை விட புகழ் பெற்றதாக
இருக்கிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் எங்கள் மீது
அவதுாறுகளை அள்ளி வீசுகின்றனர். ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்.
அவர்களுக்கு பதிலுக்கு பதில் பேசி, நம் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
விஷக்கிருமிகளின் உருட்டல்கள் காலப்போக்கில் காணாமல் போய் விடும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
குழந்தைக்கு செந்தாமரை பெயர்
நெல்லையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, சென்னை திரும்புவதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினை, நேற்று கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது, நெல்லை மாவட்டம், மூலக்கரைபட்டியை சேர்ந்த தி.மு.க., நகரச் செயலர் முருகையா பாண்டியன் -- சிதம்பரவடிவு தம்பதி, தங்கள் இரண்டு மாத பெண் குழந்தையுடன் முதல்வரை காண காத்திருந்தனர்.
முதல்வரை பார்த்த அவர்கள், குழந்தைக்கு பெயர் சூட்டும்படி கேட்டுக் கொண்டனர். குழந்தைக்கு, செந்தாமரை என பெயர் சூட்டிய முதல்வர், குழந்தையின் காதில் செந்தாமரை என, கூறினார். முதல்வர் ஸ்டாலின் தனது மகள் செந்தாமரை பெயரையே குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்தார்.