துாத்துக்குடியில் தொழில் துறை மாநாடு இன்று துவக்கி வைக்கிறார் ஸ்டாலின்
துாத்துக்குடியில் தொழில் துறை மாநாடு இன்று துவக்கி வைக்கிறார் ஸ்டாலின்
ADDED : ஆக 04, 2025 01:11 AM
சென்னை : முதலீட்டாளர்களை ஈர்க்க, துாத்துக்குடியில் நடக்கும் மண்டல அளவிலான முதல் மாநாட்டில், 'வின்பாஸ்ட்' கார் தொழிற்சாலையை, முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்க உள்ளார்.
தமிழக அரசின் தொழில் துறை சார்பில், உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க, துாத்துக்குடி, திருச்சி, கோவை, கிருஷ்ணகிரி என, பல மாவட்டங்களில் மண்டல அளவிலான மாநாடுகள் நடத்தப்பட உள்ளன.
முதல் மண்டல மாநாடு, இன்று துாத்துக்குடியில் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
இம்மாநாட்டில், 32,554 கோடி ரூபாய் முதலீட்டிற்கான, 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதன் வாயிலாக, 49,845 பேருக்கு, நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கும். இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த, 'வின்பாஸ்ட்' கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
இம்மாநாடு தொழில் துறையை வலுப்படுத்துவதுடன், அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்யும் என அரசு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜா கூறியதாவது:
உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க நடத்தப்படும் மண்டல அளவிலான மாநாடு, 'டிஎன் ரைசிங்' என்ற பெயரில் நடக்கிறது. முதலீட்டாளர்களை சந்திக்கும் போதெல்லாம், தமிழகம் சமூக மற்றும் தொழில் துறை உள்கட்டமைக்கு, மிகவும் வலுவாக இருப்பதை சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.
உங்கள் கண்களை கட்டிக்கொண்டு, எந்த இடத்தையும் தேர்வு செய்யலாம். அங்கு திறமையால் நிறைந்த இடங்கள், தொழில் துறைக்கு தயாராக இருப்பதை உணர்வீர்கள் என்று தெரிவித்து வருகிறேன். துாத்துக்குடியை தொ டர்ந்து, கோவை, திருச்சி என, பல இடங்களில், மண்டல முதலீட்டு மாநாடுகள் நடக்க உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

