sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

136 நகரங்களுக்கு விரைவில் வளர்ச்சி திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

/

136 நகரங்களுக்கு விரைவில் வளர்ச்சி திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

136 நகரங்களுக்கு விரைவில் வளர்ச்சி திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

136 நகரங்களுக்கு விரைவில் வளர்ச்சி திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2


ADDED : பிப் 15, 2025 12:43 AM

Google News

ADDED : பிப் 15, 2025 12:43 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட, 136 நகரங்களுக்கான புதிய வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' சார்பில், சென்னை வர்த்தக மையத்தில், 'பேர்புரோ - 2025' என்ற வீட்டுவசதி கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை துவக்கி வைத்து, முதல்வர் பேசியதாவது:

நகர்ப்புற திட்டம்


தமிழக மக்கள் தொகையில், 48 சதவீதம் பேர் நகரங்களில் வசிக்கின்றனர். தமிழகம் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. வரும் ஆண்டுகளில், இது மேலும் உயரும் என்பதால், நீடித்து நிலைக்கக் கூடிய வீட்டுவசதி தேவைகள் அதிகரிக்கும்.

இதை சமாளிப்பதற்கு, புதுமையான நகர்ப்புற திட்டங்களை தீட்ட வேண்டும். சென்னை பெருநகர் பகுதிக்கான முதலாவது, இரண்டாவது முழுமை திட்டங்கள், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன.

தற்போது, மூன்றாவது முழுமை திட்டத்தையும், இந்த அரசு தான் முனைப்போடு தயாரித்து வருகிறது.

இந்த திட்டம் தான் அடுத்த, 20 ஆண்டுகளுக்கு, சென்னையின் வளர்ச்சியை வழிநடத்தப் போகிறது. தமிழகம் முழுதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த, 10 மண்டல திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கோவை, மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், திருச்சி, வேலுார், திருநெல்வேலியை உள்ளடக்கிய, 136 நகரங்களுக்கு புதிதாக வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஓசூருக்காக புதிய முழுமை திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கோவை, மதுரைக்கான புதிய முழுமை திட்டங்கள், அடுத்த மாதத்துக்குள் வெளியிடப்படும்.

சென்னை பெருநகரில், மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதுார், பரந்துார் ஆகிய பகுதிகள், புதிய நகர்ப்புற வளர்ச்சி மையங்களாக மாறிஉள்ளன.

இப்பகுதிகளுக்கு புதிதாக நகர வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் நெரிசலை குறைக்க வேண்டும். பொருளாதார மையங்களை உருவாக்க வேண்டும்.

போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும். சென்னை மாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வது தான் அரசின் நோக்கம். அதற்கான பணிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த, 2023ல், 'கிரெடாய் பேர்புரோ' கண்காட்சியை துவக்கி வைத்த போது உறுதி அளித்தபடி, ஒற்றை சாளர முறை மற்றும் இணையதள கட்டட அனுமதி வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மனைப்பிரிவு மற்றும் கட்டடம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதிகளின் எண்ணிக்கை, 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில், திட்ட அனுமதி வழங்குவதற்கான கால அளவு, 180 நாட்களில் இருந்து, 64 மற்றும் 90 நாட்களாக குறைந்துள்ளது.

தமிழகத்தில், 2,500 சதுர அடி நிலத்தில், 3,500 சதுர அடி பரப்பளவுக்கு வீடு கட்டுவதற்கு தானியங்கி முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தில், இதுவரை, 51,000 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 100 வரைபடங்களை முன்மாதிரிகளாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, இத்திட்டத்தை செம்மையாக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

போக்குவரத்து மேம்பாட்டுக்காக, குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பஸ் முனையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். செங்கல்பட்டு, மாமல்லபுரம் போக்குவரத்து முனையங்கள், அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளன.

கட்டுமான திட்டம்


சென்னை நீர் முனைய வளர்ச்சி திட்ட நிறுவனம் வாயிலாக, 12 ஏரிகள் மற்றும் நான்கு கடற்கரைகளை மேம்படுத்தும் திட்டம், 250 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த, 3 ஆண்டுகளில், 2,600 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள், சி.எம்.டி.ஏ., வாயிலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

சென்னை மற்றும் தமிழகம் முழுதும் கூடுதலாக தொழிற்பூங்காக்கள், அலுவலக இடங்கள் தேவைப்படுகின்றன.

தொழில் துறையினரின் இந்த கோரிக்கையை, கிரெடாய் அமைப்பினர் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் கட்டும் அடுக்குமாடி கட்டடங்கள் அருகில், பூங்காக்கள், நீர்நிலைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கிரெடாய் அமைப்பின் தேசிய துணை தலைவர் ஸ்ரீதரன் பேசியதாவது:

தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால், கட்டுமான திட்டங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால், அதிக எண்ணிக்கையிலான வீடுகள், மனைகள் மக்களுக்கு கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

கட்டுமான திட்டங்களுக்கு குறிப்பிட்ட கால வரம்புக்குள், அதிகாரிகள் தடையின்மை சான்று வழங்காவிட்டால், சான்று வழங்கப்பட்டதாக கருதி, அடுத்த பணிகளை மேற்கொள்ளலாம் என்ற நடைமுறை, நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அமலில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, கிரெடாய் தமிழக பிரிவு தலைவர் இளங்கோவன், சென்னை பிரிவு தலைவர் முகமது அலி, பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளர் பர்மிந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us