ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு அரசு செலவில் சிகிச்சை முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு அரசு செலவில் சிகிச்சை முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ADDED : பிப் 10, 2025 05:25 AM

சென்னை; 'ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டதில், பலத்த காயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்கும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும், நான்கு மாத கர்ப்பிணி ஒருவர், தன் சொந்த ஊர் செல்வதற்காக, 6ம் தேதி பிற்பகல், கோவை - திருப்பதி விரைவு ரயிலில், பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில், அந்த பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம் சின்ன நாகலை சேர்ந்த ஹேமராஜ் என்பவன், அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயற்சித்து, அவரை தாக்கியுள்ளான்.
சீதாராமன்பேட்டை அருகே, ஓடும் ரயிலில் இருந்து அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டான். அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதைக்கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்து, ராணிபேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்பெண்ணுக்கு, உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது மருத்துவ செலவு முழுதையும், தமிழக அரசே ஏற்கும். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹேமராஜ், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

