சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பில் ஸ்டாலின் அரசு தோல்வி: பழனிசாமி
சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பில் ஸ்டாலின் அரசு தோல்வி: பழனிசாமி
ADDED : மார் 20, 2025 08:02 PM
சென்னை:''தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பதில், ஸ்டாலின் மாடல் அரசு தோல்வி அடைந்து, செயலற்று உள்ளது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்த பின், பழனிசாமி அளித்த பேட்டி:
சட்டசபையில் முக்கிய பிரச்னை குறித்து கேள்வி எழுப்புவது, எதிர்க்கட்சிகளின் கடமை. அதன்படியே, ஒரே நாளில் நடந்த நான்கு கொலைகளை சுட்டிக்காட்டி பேச முயன்றேன். ஆனால், என்னை முழுமையாக பேச விடாமல், சபாநாயகர் அடிக்கடி குறுக்கிட்டு, பேச முடியாத நிலையை உருவாக்கினார்.
தி.மு.க., ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஸ்டாலின் மாடல் அரசும், அவரது தலைமையில் இயங்கும் காவல் துறையும் செயலற்று உள்ளது. தினமும் கொலை, கொள்ளை நடக்கிறது. ஆட்சியின் சாதனையாக கொலை பட்டியல் உள்ளது. ஆனால், போலீசார் வேடிக்கை பார்க்கும் அவலநிலை உள்ளது. போலீசாரை பார்த்து குற்றவாளிகளுக்கு அச்சமில்லை.
குற்றம் நடந்தால் கைது செய்கிறோம் என்கின்றனர். எந்த ஆட்சியில் குற்றம் நடந்தாலும், குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்.
மேலும், கொலை பட்டியலை, நிதிநிலை அறிக்கைபோல், 'அ.தி.மு.க., ஆட்சியில், 50 கொலை, தி.மு.க., ஆட்சியில் 45 கொலை' என்ற அடிப்படையில் ஒப்பிட்டு பேசுகின்றனர். மக்கள் உங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். நீங்கள் தான் முதல்வர், ஒப்பிட்டு பார்த்து திசை திருப்புவதை விட, மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளியுங்கள்.
அரசியல் கட்சி தலைவர்கள், சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தி.மு.க., இடம் பெற்றிருக்கும் 'இண்டியா' கூட்டணி கட்சிகளே, அந்நாடகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. இதுபோன்ற நாடகங்களை தவிர்த்து, ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

