ஸ்டாலின் இரும்புக்கரம் துருப்பிடித்து விட்டது நயினார் நாகேந்திரன் ஆவேசம்
ஸ்டாலின் இரும்புக்கரம் துருப்பிடித்து விட்டது நயினார் நாகேந்திரன் ஆவேசம்
ADDED : நவ 20, 2025 12:36 AM

சென்னை: 'முதல்வர் ஸ்டாலினால் பெருமையாக பேசப்பட்ட, 'இரும்புக்கரம்' ஒருபோதும் செயல்படாமல், ஒட்டு மொத்தமாக துருப்பிடித்து போய் விட்டது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், நான்கு கொலைகள், நான்கு போதைப்பொருள் கடத்தல்கள், நான்கு பாலியல் குற்றங்கள், ஒரு கொலை முயற்சி, போலீஸ் மீதான தாக்குதல் ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன.
இது போதாததற்கு, சென்னையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கொலை முயற்சி நடந்தது.
தி.மு.க., ஆட்சியில் தலைநகரிலேயே, ஏட்டளவுக்கு கூட, சட்டம் - ஒழுங்கு இல்லை என்பதை போதையில் இருவர் போலீசாரை தாக்கிய சம்பவம், பட்டவர்த்தனமாக்குகிறது.
முதல்வர் ஸ்டாலினால் பெருமையாக பேசப்பட்ட, 'இரும்புக்கரம்' நான்கரை ஆண்டுகளாக ஒருபோதும் செயல்படாமல், தற்போது ஒட்டுமொத்தமாக துருப்பிடித்து போய் விட்டது.
இதற்கு, ஒரே நாளில் நடந்த குற்ற சம்பவங்களே சாட்சி. துருப்பிடித்த இரும்பை காயலான் கடைக்கு துாக்கி போடுவதுபோல, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசை மக்களும், துாக்கி எறியத்தான் போகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

