ஆட்சி மீதான நம்பிக்கையில் 'அப்பா' என அழைக்கின்றனர் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
ஆட்சி மீதான நம்பிக்கையில் 'அப்பா' என அழைக்கின்றனர் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
ADDED : பிப் 20, 2025 01:26 AM

சென்னை:''மாணவியர் எல்லாம் என்னை பார்த்து, 'அப்பா அப்பா' என்று உணர்ச்சிகரமாக அழைக்கின்றனர். அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக கட்டப்பட்டுள்ள, 712 குடியிப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த காலங்களில், வட சென்னை ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதை மாற்றி, மத்திய சென்னை, தென் சென்னை எப்படி வளர்ந்துள்ளதோ, அதேபோன்று வட சென்னையை, வளர்ச்சி சென்னையாக மாற்ற வேண்டும்; மற்ற பகுதிகளை விட பெரிதாக உருவாக்க வேண்டும். இதற்காக, அரசு சிறப்பாக பல்வேறு திட்டங்களை கொண்டு சேர்த்திருக்கிறது.
வட சென்னை வளர்ச்சி திட்டத்திற்கு, முதலில் நான், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கினேன். இப்போது, 6,400 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு, பல்வேறு பணிகளை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, 23 மாவட்டங்களில், 5,059 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 44,609 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.
தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள், 100க்கு 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றி காட்டியிருக்கிறோம். இன்னும் மீதி திட்டங்கள் என்னென்ன என்று கேட்கலாம்.
புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் என, தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இதையெல்லாம் நான் எடுத்து சொல்வதற்கு காரணம், இது தேர்தல் வாக்குறுதிகள் இல்லை. கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டியிருக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது.
இன்றைக்கு மாணவியர் எல்லாம் என்னை பார்த்து, 'அப்பா அப்பா' என்று அழைக்கக்கூடிய உணர்ச்சிகரமான, நெகிழ்ச்சியான செய்தியை பார்த்திருப்பீர்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. சிறப்பான ஆட்சிக்கு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன், தமிழக வீட்டுவசதி வாரிய செயலர் காகர்லா உஷா பங்கேற்றனர்.
வீடு ஓதுக்கீடு ஆணை பெற்றவர்களுக்கு, முதல்வர் சார்பில், இட்லி குக்கர்கள் பரிசாக வழங்கப்பட்டன.

