ADDED : மே 24, 2024 04:17 AM

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதம்:
காவிரிப் படுகையில், அமராவதி துணைப் படுகையின் ஒரு பகுதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக, சமீபத்தில் சில ஊடகங்களில் செய்தி வந்தது. இதன் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என, தமிழக விவசாயிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும். தடுப்பணை தொடர்பான திட்ட விபரங்கள் எதுவும், தமிழக அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை.
தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர், கேரள நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளபடி, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம், கேரளாவின் பவானி மற்றும் அமராவதி துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் ஆகிய முழு விபரங்களை அளிக்க வேண்டும்.
இந்த பிரச்னை குறித்து, சட்டப்படி ஆய்வு செய்வதற்கு, இவ்விபரங்கள் மிகவும் தேவை. எனவே, இந்த விபரங்களை, தமிழகத்திற்கு உடனடியாக அளிக்க வேண்டும்.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையிலான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்த, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, இந்த பணியை நிறுத்தி வைக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.