'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்; மக்கள் மனம் அறிய போட்டி
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்; மக்கள் மனம் அறிய போட்டி
ADDED : ஆக 19, 2025 06:45 AM
சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' குறித்து, மக்களின் மனங்களை அறிவதற்கு, செய்தித்துறை வாயிலாக போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து, செய்தித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம், ஜூலை, 15ல் துவக்கப்பட்டது. நகரப்பகுதிகளில், 13 துறைகளின் 43 சேவைகள், ஊரகப்பகுதிகளில், 15 துறைகளின், 46 சேவைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டம் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள சிந்தனைகள், மாற்றங்கள் குறித்து, மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளும் வகையில், செய்தி துறையின் ஊடக மையம் பல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது. இன்று முதல் செப்., 20ம் தேதி வரை போட்டிகள் நடக்க உள்ளன. போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்க உள்ளார்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட, ஏதேனும் ஒரு அரசு நலத்திட்டம் அல்லது திட்டம் ஒருவரது வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்தியுள்ளது என்ற உண்மையான அனுபவத்தை, ஒரு பக்க கட்டுரை அல்லது ரீலாக உருவாக்கி அனுப்ப வேண்டும்.
தனியாகவோ, குழுவாகவோ, இதில் பங்கேற்கலாம். பகிரப்படும் வீடியோ மற்றும் கட்டுரை, முற்றிலும் உண்மையான அனுபவங்களை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.
புகைப்பட, 'இன்போகிராபிக்' வடிவமைப்பு போட்டியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சாதனைகளையும், மக்கள் பெற்ற நன்மைகளையும், கலைநயமிக்க மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய போஸ்டர்களாக வடிவமைத்து அனுப்ப வேண்டும். சிறந்த படைப்புகள் செய்தித் துறையின் அதிகாரபூர்வ சமூக ஊடகத்தில் பகிரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.