வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள்; நாள் முழுக்க காத்திருந்த மக்கள் கனவு சிதைப்பு
வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள்; நாள் முழுக்க காத்திருந்த மக்கள் கனவு சிதைப்பு
UPDATED : ஆக 30, 2025 10:10 AM
ADDED : ஆக 30, 2025 05:33 AM

திருப்புவனம்: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் வீசப்பட்டது, பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறுவதற்காக, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை, தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக மக்கள் வசிக்கும் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மனுக்களை பெற்று வருகின்றனர். அந்த மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிர்ச்சி
இந்நிலையில், சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தண்ணீரில் மிதந்தது, பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த மனுக்கள் எல்லாம், திருப்புவனம் தாலுகாவை சேர்ந்த பூவந்தி, மடப்புரம், திருப்புவனம் நெல்முடிகரை, கொந்தகை, கீழடி கிராமங்கள் உள்ளிட்ட இடங்களில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்டவை. தாசில்தார், ஆர்.ஐ., - வி.ஏ.ஓ., ஆகியோரின் கையெழுத்துடன், பொதுமக்கள் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் மூட்டையாக கட்டி வீசப்பட்டுள்ளன.
இது குறித்து தி.வடகரை கார்த்திக் கூறுகையில், ''வைகை ஆற்றில் குளிக்க வந்த போது ஏராளமான காகிதங்கள், பாதி தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தன. அனைத்திலும் தாசில்தார் கையெழுத்து இருந்தது. மனுக்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், 20 அடிக்கும் மேலாக ஆழம் உள்ளது. எனவே, இன்னும் மனுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி வெளிட்ட அறிக்கை:
விசாரணை திருப்புவனம் வைகை ஆற்றில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. சிவகங்கை ஆர்.டி.ஓ., விஜயகுமார் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது.
அப்பகுதியில் பெறப்பட்ட மனுக்களில், பட்டா மாறுதல் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்ட ஆறு மனுக்களின் நகல்கள் மற்றும் தாசில்தார் அலுவலகம் வழியே பெறப்பட்ட ஏழு மனுக்களின் நகல் கிடந்துள்ளன.
திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த அலுவலர், ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது. இது குறித்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில், இது போன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

