UPDATED : மார் 15, 2024 02:28 AM
ADDED : மார் 13, 2024 11:53 PM

பொள்ளாச்சி : மத்திய அரசின் திட்டங்களில் எதை நாங்கள் தடுத்தோம்? தமிழகத்தில் செயல்படுத்திய சிறப்பு திட்டங்களை, பிரதமர் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?'' என, பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், 560.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 273 திட்டங்கள், 489.53 கோடி ரூபாய் மதிப்பிலான 35 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, 223.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கோவை மாவட்டத்துக்கு நான்கு முறை வந்து, ஒரு லட்சத்து, 48,949 பேருக்கு, 1,441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளேன். ஐந்தாவது முறையாக தற்போது வந்துள்ளேன்.
பொறாமை
பயனாளிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, திட்டத்தின் பலன் வந்து சேர்ந்ததா அதில் ஏதாவது சிரமம் இருக்கிறதா என கேட்கிறேன்.
கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல், கடைக்கோடியில் உள்ள மக்களிடமும் பேசும் முதல்வராக உள்ளேன்.
தமிழகம் முன்னேறுவதை கண்ட சிலர், பொறாமையில் தமிழக மக்களையும், உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில், பொய்களையும், அவதுாறுகளையும் பரப்ப, 'வாட்ஸாப் யுனிவர்சிட்டி' நடத்துகின்றனர்.
மேற்கு மண்டலத்தை தங்களுடைய கோட்டை என சொல்லிக் கொண்ட அ.தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யப்பட்டதா?
அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களை வீடியோ எடுத்து, பெற்றோரை பதற வைத்து பொள்ளாச்சி சம்பவம் நடந்தது. அப்போது தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது நான் உறுதி தந்திருக்கிறேன்; இன்றைக்கும் மறந்து விடவில்லை.
கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை, தற்கொலை நடந்தன.
கஞ்சா, குட்கா மாமூல் பட்டியலில், அமைச்சரும், டி.ஜி.பி.,யும் இருந்தது யாருடைய ஆட்சியில்? அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய விடாமல் தடுத்த கூட்டணி தான், இன்றைக்கு உத்தமர் வேஷம் போடுகிறது.
இந்த கூட்டணி மறுபடியும் மக்களை ஏமாற்றி பிரிந்த மாதிரி நடிக்கிறது.
ஒற்றுமை
தமிழகம், தமிழர்களின் நலனுக்கு எதிரான அ.தி.மு.க., - பா.ஜ., கள்ளக்கூட்டணி ஒரு பக்கம், தமிழக மக்களும், தமிழகத்தை வளமாக்க, உரிமைகளை பாதுகாக்க மற்றொரு பக்கம் ஜனநாயக சக்திகளும், தி.மு.க.,வும் ஒற்றுமையாக நிற்கிறோம்.
மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லாத போது, இத்தனை சாதனை திட்டங்களை நம்மால் கொடுக்க முடிகிறது. நமக்கு உதவி செய்கிற மத்திய அரசு அமைந்தால், இன்னும் 10 மடங்கு சாதனைகளை தி.மு.க., செய்திருக்கும்.
ஒரு வாரத்தில் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார் என செய்திகள் வருகின்றன. தமிழகத்துக்கு செய்துள்ள சிறப்பு திட்டங்களை பட்டியலிடுங்கள். என்ன சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்தீர்கள் என தமிழக மக்கள் கேட்க வேண்டும்.
'பதில் சொல்லுங்க பிரதமரே...' என எல்லாரும் கேட்க வேண்டும்.
பொய் கதைகள்
பா.ஜ., தமிழகத்துக்கு கொண்டு வரும் திட்டங்களை தி.மு.க., தடுக்கிறது என பிரதமர் சொல்கிறார். அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை நாம் தடுக்கிறோமா... என்ன திட்டத்தை கொண்டு வந்தார்? நாம் தடுப்பதற்கு, எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என சொல்வாரா?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2014ல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.,வினர் தடுக்கவில்லை; தற்போது நாங்களும் தடுக்கவில்லை.
பத்து ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த போது தமிழகத்தை திரும்பி பார்க்காமல், தற்போது தேர்தலுக்காக 10 நாள் வந்து பொய் சொன்னால், தமிழக மக்களான நாங்கள் ஏமாளிகளா, இளிச்சவாயன்களா?
பொய்யும், வாட்ஸாப் கதைகளும் பா.ஜ.,வுக்கு உயிர் மூச்சு. இனி இந்த பொய்களும், கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது.இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் முத்துசாமி, நேரு, வேலு, சாமிநாதன், ராமச்சந்திரன், கயல்விழி, கலெக்டர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விவசாயிகள் மீது அக்கறை இல்லையா?
பொள்ளாச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தென்னை இலை வாடல் நோய் இருக்கும் தென்னை மரங்களை வெட்டி எடுக்க, 10 கோடி ரூபாய் நிதி கொடுப்பேன் என்கிறார்.தென்னை விவசாயத்தை காப்பாற்ற உதவ சொன்னால், தென்னையை வெட்ட பணம் தருகிறேன் என்கிறார். தமிழக முதல்வருக்கு விவசாயிகள் மீதானஅக்கறையா இதுதானா? - வானதிபா.ஜ., -- எம்.எல்.ஏ.,

