குஜராத்தில் முத்திரை தீர்வை குறைப்பு; விவசாயிகள், நடுத்தர மக்களுக்கு பயன்
குஜராத்தில் முத்திரை தீர்வை குறைப்பு; விவசாயிகள், நடுத்தர மக்களுக்கு பயன்
ADDED : ஏப் 10, 2025 01:28 AM

ஆமதாபாத்: குஜராத் மாநில திருத்தப்பட்ட முத்திரை தீர்வை சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் வாயிலாக, நில விற்பனை, கொள்முதல், உரிமை மாற்றம் ஆகியவற்றுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டதுடன், நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள், பொதுமக்கள், நடுத்தர குடும்பங்களுக்கு நன்மை அளிக்கும் வகையில், முக்கிய முடிவுகளை முதல்வர் பூபேந்தர் படேல் எடுத்துள்ளார்.
வருவாய் ஆவணங்கள் தொடர்பாக எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளால் பொதுமக்கள் பயன்பெறுவர்.
இந்த சீர்திருத்தங்களால், தொழில் வளர்ச்சி அதிகரித்து, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு உயர்வதுடன், குறைந்த விலையில் வீடு கட்டுவதும் ஊக்குவிக்கப்படும் என குஜராத் அரசு செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ருஷிகேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
விவசாய நிலம் விற்பனை, மாற்றம், குத்தகை ஆகியவற்றில், மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற வேண்டிய நிலை இருந்தது. வருவாய் துறை நடவடிக்கைகளுக்கு சொத்து உரிமையாளர் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
அவற்றை எளிமைப்படுத்தி, அதிகபட்ச கட்டண வரம்பை முதல்வர் பூபேந்திர படேல் நடவடிக்கை வாயிலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனால், நில விற்பனை, வாங்குதல், உரிமை மாற்றம் உள்ளிட்டவை நிர்வாக ரீதியாக எளிமையாக்கப்பட்டுள்ளது, முதல்வரின் முக்கிய மைல்கல் முடிவாகும் என்ற ருஷிகேஷ் படேல், குறைவான அரசு பதவிகள், அதிகபட்ச நிர்வாகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முதல்வரின் திறமைமிக்க தலைமையின்கீழ் செயல்படும் குஜராத் வருவாய்த் துறை, விவசாய நிலம் இல்லாத மாற்றத்துக்கான நடைமுறைகளில் முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
உரிமையாளர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்குவதற்கான கால அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதன்படி, நில வகை மாற்றத்துக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்க வேண்டும். விவசாய நிலமல்லாத நிலத்தின் மாற்றத்துக்கு கட்டணம், அபராதம், சிறப்பு வரி ஆகியவை செலுத்தியிருந்தால், விண்ணப்பித்த 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்.
வளர்ந்த பாரதம் 2047 என்ற பிரதமரின் தொலைநோக்கு திட்டத்தில் இந்த சீர்திருத்தங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
குஜராத் முத்திரை தீர்வை சட்டம் 1958ல் மாற்றங்கள் செய்யப்பட்டு, திருத்தச் சட்டம் 2025 கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், நிர்வாக ரீதியாக எளிதாகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்கும் நோக்கில் இது அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.