எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய முத்திரை ஆய்வாளர் கைது
எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய முத்திரை ஆய்வாளர் கைது
ADDED : ஆக 03, 2011 01:25 AM
திருச்செங்கோடு : எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரிடம், 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருச்செங்கோடு தொழிலாளர் துறை முத்திரை ஆய்வாளரை, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கருவேப்பம்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார்.
அவர், திருச்செங்கோடு, சீத்ராம்பாளையத்தில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறார். அவரது கடையில், 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி, தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, கடையில் வேலை செய்த, ஆலாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், குழந்தை தொழிலாளர் எனத் தெரியவந்தது. அது தொடர்பாக, கடை உரிமையாளர் மீது, தொழிலாளர் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடையில் வேலை பார்த்தச் சிறுவன், 14 வயதை கடந்தவர் என, உதயகுமார், ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் பிறப்புச் சான்றிதழ் பெற்று, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன், தொழிலாளர் துறையைச் சேர்ந்த முத்திரை ஆய்வாளர் அம்பேத்கார், 45, எலக்ட்ரிக்கல்ஸ் கடைக்கு சென்று, 5,000 ரூபாய் கொடுத்தால், குழந்தை தொழிலாளர் தொடர்பான வழக்கை முடித்துத் தருவதாகக் கூறியுள்ளார்.
அவ்வளவு தொகை வழங்க முடியாது என, உதயகுமார் தெரிவித்ததால், முத்திரை ஆய்வாளர், 4,000 ரூபாய் வழங்கினால் போதும் எனக் கூறியுள்ளார். உதயகுமார், அது தொடர்பாக, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, 4,000 ரூபாய் தருவதாக, முத்திரை ஆய்வாளரிடம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே உள்ள, அய்யங்கார் பேக்கரிக்கு வரும்படி, அம்பேத்கார் தெரிவித்துள்ளார். நேற்று மதியம் 1 மணியளவில், அங்கு சென்ற உதயகுமார், முத்திரை ஆய்வாளரிடம் ரசாயன பவுடர் தடவிய, 4,000 ரூபாயை கொடுத்துள்ளார். அதை அம்பேத்கார் வாங்கியபோது, அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சந்திரமவுலி தலைமையிலான போலீஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த, 4,000 ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.