நாகை மாவட்ட தே.மு.தி.க.,வில் கோஷ்டி பூசல் : விஜயகாந்த் பிறந்த நாள் பேரணிக்கு போலீஸ் தடை
நாகை மாவட்ட தே.மு.தி.க.,வில் கோஷ்டி பூசல் : விஜயகாந்த் பிறந்த நாள் பேரணிக்கு போலீஸ் தடை
ADDED : செப் 04, 2011 01:17 AM
நாகப்பட்டினம்: நாகையில் விஜயகாந்த் பிறந்தநாள் பேரணிக்கு போலீசார் தடை விதித்தனர். தே.மு.தி.க., மாவட்ட செயலர் பிண்ணயில் இருந்து செயல்படுவதாக தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாகை தே.மு.தி.க., தெற்கு மாவட்டம் சார்பாக விஜயகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சியாக ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி, முன்னாள் மீனவரணி செயலர் பெரு.மதியழகன் தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு, ரயில்வே ஸ்டேஷன் வாசலில் இருந்து புறப்பட்டு, முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் திரண்டிருந்தனர். முன்கூட்டியே போலீசார் அனுமதி பெற்றிருந்த இப் பேரணியால், கட்சியில் குழப்பம் ஏற்படும், சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் என்று தே.மு.தி.க., நாகை மாவட்ட செயலர் கணேசன், போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து, பேரணிக்கு போலீசார் திடீர் தடை விதித்தனர். இதை சற்றும் எதிர்பாராத தொண்டர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருதலைப்பட்சமாக போலீசார் நடந்து கொள்வதாகக் கூறி கடுமையாக கண்டனம் செய்தனர்.
இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷன் வாசலில் நின்று,விஜயகாந்தை வாழ்த்தி கோஷமிட்டும், மாவட்ட செயலர் கணேசனை கடுமையாக விமர்சித்தும் கோஷம் போட்டு தொண்டர்கள் கலைந்து சென்றனர். நிர்வாகிகள் மட்டும், கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த புறப்பட்டுச் சென்றனர். தே.மு.தி.க.,வினர் நிருபர்களிடம் கூறுகையில்,'தொண்டர்கள் ஆதரவே இல்லாத ஒரு நபரை, மாவட்ட செயலர் ஆக்கிவிட்டதன் காரணமாக, மீனவர் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பு தொண்டர்களும் சோர்வடைந்து, கொந்தளிப்பில் உள்ளனர். விஜயகாந்த் பிறந்த நாள் பேரணியைக் கூட நடத்த விடாமல் செய்யும் மாவட்ட செயலரை உடனே நீக்க, மாநில தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளோம். காலதாமதம் ஆனால், வரும் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க.,விற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்' என்றனர்.