மத்திய அரசு நிதியை மாநில அரசு ஒழுங்காக செலவிடுவதில்லை: சசிகலா
மத்திய அரசு நிதியை மாநில அரசு ஒழுங்காக செலவிடுவதில்லை: சசிகலா
ADDED : ஜன 17, 2025 09:13 PM
சென்னை'''மத்திய அரசு வழங்கும் நிதியை, தமிழக அரசு ஒழுங்காக செலவிடாமல்லை என, மத்திய அரசு மீது மாநில அரசு குற்றம் சுமத்துகிறது. அதே நேரம், நான் சொன்னால் தமிழக அரசில் கொஞ்சம் வேலை நடக்கிறது,'' என, சசிகலா தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து களம் இறங்கினால், வெற்றி கிடைக்கும். தி.மு.க., அரசு வீண் செலவு செய்கிறது; உருப்படியாக எதையும் செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுகின்றனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான மத்திய அரசு திட்டங்கள் பல உள்ளன. அதை ஆதரிக்க வேண்டும்.
ஜல் ஜீவன் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குகிறது. மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் இத்திட்டங்களுக்கு நிதி வழங்குகிறது. தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசு தர வேண்டிய நிதியை முறையாக கேட்டு பெறவில்லை. ஏனென்றால், மாநில அரசு வழங்க வேண்டிய நிதிக்கு, இங்கே பணம் இல்லை. கூடவே, மத்திய அரசு வழங்கும் நிதியையும் ஒழுங்காக செலவிடுவதில்லை.
தமிழகத்தில் குடும்ப ஆதிக்கம் காரணமாக, அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரை எழுந்திருக்கும்படி கூறியுள்ளனர். முதல்வர் குடும்பத்தினர் பின் வரிசையில் அமரலாம்; ஆனால், அதை செய்யவில்லை. எதிர்க்கட்சி என்பது ஆளும் கட்சியை தட்டி கேட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவை. அப்போதுதான் ஆளும் கட்சிக்கு பயம் இருக்கும்.
நான் கேள்வி கேட்டால், யாரும் பதில் பேசுவதில்லை. ஆனால், 'டக் டக்' என, வேலை செய்து முடிக்கின்றனர். என்னை பொறுத்தவரை, மக்களுக்கு நல்லது நடக்கணும்.
தமிழக்ததில், போலீசாரை வேலை செய்ய விடுவதில்லை. அவர்கள் செயல்பட வேண்டும் என்றால், அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது. எப்படியும் அ.தி.மு.க., ஒருங்கிணையும். தி.மு.க., நினைப்பதுபோல், 2026 இருக்காது. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு பணி நடந்து வருகிறது.
தமிழக மக்களுக்கு மூளை இல்லை என தி.மு.க., நினைக்கிறது. 'நீட்' தேர்வை உடனே நீக்குவோம் என்றனர்; நீக்கவில்லை. 'நீட்' தேர்வு வேண்டாம் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. நியாயமான விஷயங்களை, தி.மு.க.,விடம் எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.