மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் மாநில அரசுகள் வழக்கு போட முடியாது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் மாநில அரசுகள் வழக்கு போட முடியாது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
ADDED : ஆக 29, 2025 04:30 AM
சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஜனாதிபதி, கவர்னர்கள் முடிவெடுக்கும் விவகாரத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள் வழக்கு தொடர முடியாது' என, மத்திய அரசு வாதிட்டு உள்ளது.
சட்டசபைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஜனாதிபதி மற்றும் கவர்னர் களுக்கு உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி, 14 கேள்விகளை எழுப்பி இருந்தார்.
ஆய்வு இந்த விவகாரத்தை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரித்து வருகிறது. ஐந்தாவது நாளாக நேற்று விசாரணை நடந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த வாதம்:
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரங்களில் எந்த அளவுக்கு விசாரணையை நடத்த முடியும்? அவ்வாறு செய்வது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதற்காகத்தான் ஜனாதிபதி விளக்கம் கேட்டு உள்ளார்.
குறிப்பாக, ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்யும்போது, அந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
அது முடியாது என்றால், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரங்களிலும் நீதிமன்றங்கள் தலையிட முடியாது.
ஒரு மசோதா மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்கவில்லை என்றால், அதற்கான காரணத்தை ஜனாதிபதி தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்க அதிகாரம் கிடையாது.
அது மட்டும் இல்லாமல், மூன்று மாதத்திற்குள் மசோதா மீது ஜனாதிபதி முடிவெடுக்க வில்லை என்றால், மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என சொல்வதெல்லாம் சட்ட விதிமுறைகளுக்கு முரணானது.
மேலும், மசோதாக்கள் மீது ஜனாதிபதி, கவர்னர்கள் முடிவெடுக்கும் விவகாரத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள் வழக்கு தொடரவும் முடியாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
ஒத்திவைப்பு இதை தொடர்ந்து, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியதாவது:
கவர்னர் ஒப்புதல் வழங்கினாலும் அந்த மசோதாவில் சட்ட பிரச்னைகள் இருந்தால், அதை ஆராயும் உரிமையும் அதிகாரமும் நீதிமன்றங்களுக்கு இருக்கிறது.
ஆனால், ஒரு மசோதா மீது கவர்னர் எத்தனை காலம் முடிவெடுக்காமல் அப்படியே வைத்திருக்க முடியும்; அப்படி அவர் வைத்திருந்தால் நீதிமன்றம் தலையிட முடியுமா முடியாதா என்பதுதான் பிரச்னை.
மசோதாக்கள் மீது கவர்னர்கள் மாத கணக்கில் முடிவெடுக்காமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்றைய அலுவல் நேரம் முடிந்ததை அடுத்து, விசாரணை செப்., 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
- டில்லி சிறப்பு நிருபர் - .

