சாலை, பாலங்கள் கண்காணிப்புக்கு அதிநவீன வாக்கி - டாக்கி கருவிகள் தமிழக நெடுஞ்சாலை துறையில் அறிமுகம்
சாலை, பாலங்கள் கண்காணிப்புக்கு அதிநவீன வாக்கி - டாக்கி கருவிகள் தமிழக நெடுஞ்சாலை துறையில் அறிமுகம்
ADDED : அக் 25, 2025 12:56 AM
சென்னை: சாலைகள் மற்றும் பாலங்களை, அதிநவீன வாக்கி - டாக்கி வாயிலாக கண்காணிப்பதற்கான புதிய முயற்சியை, மாநில நெடுஞ்சாலைத் துறை துவங்கியுள்ளது.
மாநிலம் முழுதும், 68,150 கி.மீ., சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது. இவற்றில், 1.42 லட்சம் மேம்பாலங்கள், கீழ் பாலங்கள், சிறு பாலங்கள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு உள்ளன.
பருவமழை காலங்களில், இயற்கை சீற்றம் உள்ளிட்ட காரணங்களால், நெடுஞ்சாலைகளில், மரங்கள் விழுதல், வாகனங்கள் விபத்து, மலைச்சரிவு, வெள்ளத்தால் சாலை துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. மலைப் பாதைகளில் வாகன போக்கு வரத்தை நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.
அத்தகைய நேரங்களில், போக்குவரத்தை மீண்டும் துவங்க, சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டிஉள்ளது. தகவல் கிடைத்தவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு, மொபைல் போன் வாயிலாக தகவல் பரிமாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, பருவமழை காலங்களில் சாலைகள் மற்றும் பாலங்களை, அதிநவீன 'வாக்கி - டாக்கி' வாயிலாக கண்காணிப்பதற்கான சோதனை முயற்சியை, நாட்டிலேயே முதல்முறையாக தமிழக நெடுஞ்சாலைத் துறை துவங்கியுள்ளது.
முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த கோட்ட பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் 20 பேருக்கு, அதிநவீன வாக்கி - டாக்கி கருவிகளை, அத்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுதும் உள்ள, 90 அதிகாரிகளுக்கு வாக்கி - டாக்கி கருவிகள் வழங்கப்பட உள்ளன.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நெடுஞ்சாலைத் துறை பயன்படுத்தும் வாக்கி - டாக்கி, மொபைல் போன்களை விட, அதிநவீன வசதி கொண்டது. இதில், 90 சாட்டிலைட் சேனல்கள் உள்ளன.
மாவட்ட அளவில் அதிகாரிகளிடம் தனியாக பேசுவதற்கும், உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேசுவதற்கும், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள், மாநில அளவில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பிப்பதற்கும் இந்த சேனல்களை பயன் படுத்திக் கொள்ள முடியும். ஒரு வாக்கி - டாக்கியின் விலை 23,000 ரூபாய்.
இவ்வாறு அவர் கூறினார்.

